(எம்.மனோசித்ரா)
நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை கடந்த ஒரு மாத காலமாக உயர்வடைந்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை அண்மித்துள்ளது.
இந்நிலையில் இன்றையதினமும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, பாராளுமன்ற பொலிஸார் மூவருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை செவ்வாயன்று 42 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக 14 ஆம் திகதி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள போதிலும் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் மாத்தளை, நுவரெலியா, கேகாலை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னனெடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேற்கூறிய மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இன்று புதன்கிழமை 3,306 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இலங்கையில் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 92547 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 94532 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் உருவாகிய கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர். இன்று 1504 பேர் தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்தனர். அதற்கமைய இதுவரையில் தொற்றுறுதி செய்யப்பட்டோரில் ஒரு இலட்சத்து 60 714 பேர் குணமடைந்துள்ளனர். 29568 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செவ்வாயன்று 42 கொவிட் மரணங்கள்
நேற்று செவ்வாய்கிழமை மேலும் 42 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவற்றில் ஒரு மரணம் மாத்திரம் கடந்த முதலாம் திகதி பதிவாகியுள்ளதோடு , ஏனையவை மே மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 - 99 வயதுக்கு இடைப்பட்ட 12 பெண்களும் , 31 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 7 பேர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர். ஹெம்மாத்தகம, பாணந்துரை, புத்பிட்டி, தெவலபல, கொழும்பு-15, நிட்டம்புவ, இறக்ககாமம் -2, நாரம்மல, பமுனுகம, ஹீனட்டியாகல, திவிதுர, வக்வெல்ல, காலி, கொச்சிக்கடை, சீதுவ, மஹகித்கம, கொழும்பு-5, மாத்தளை, ஹொரணை, உஸ்ஸாபிட்டி, மகரகம, லுனுவில, மாத்தளை, நொச்சியாகம, அநுராதபுரம், திவுலபிட்டி, தெஹிவலை, மாலமுல்ல மேற்கு, ஹபருகல, களுத்துறை, பத்தேகம, கொட்டுகொட, வத்தளை, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, கொழும்பு-7 மற்றும் எல்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
பாராளுமன்ற பொலிஸார் மூவருக்கு தொற்றுறுதி
பாராளுமன்ற பொலிஸாரில் மேலும் மூவருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரையில் பாராளுமன்ற பொலிஸார் 9 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் ஐவர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த மூவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்ற பொலிஸ் பிரிவில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் அலுவலகம், பிரதி செயலாளர் நாயகத்தின் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் கொவிட் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
8 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு தொடர்பில் பாராளுமன்ற குழு கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் 7 ஆம் திகதி காலை 9.30 க்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment