(எம்.எப்.எம்.பஸீர்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பல் எரிந்தமை, அதிலிருந்த இரசாயனங்கள் உள்ளிட்ட பதார்த்தங்கள் கடலில் கலந்தமை காரணமாக இலங்கையில் கடற் பரப்புக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்த திரவியங்கள் கடலுடன் கலந்து அவை கரையொதுங்க ஆரம்பித்தது முதல், இதுவரை சுமார் 1,150 தொன்னுக்கும் அதிகமான கழிவுப் பொருட்கள் கடற் கரைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து இந்த கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தி வருவதுடன், அவை அனைத்து கொள்கலன்களில் அடைக்கப்பட்டு, வத்தளை பொலிஸ் நிலையம் அருகே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ் வரும் விஷேட இடமொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இதுவரை இராணுவத்தின் 14 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால் சுஜீவ செனரத் யாப்பாவின் கீழ் 350 இராணுவத்தினர் முன்னெடுத்த பணிகளில், கரையொதுங்கிய கழிவுப் பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் என 25 கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு, சிலாபம், மொரட்டுவை மற்றும் வெள்ளவத்தை கடற் கரைகளிலிருந்து அவை மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அப்பகுதி கடற் கரைகளில் கரையொதுங்கும் கப்பல் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைக்ளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க கரையோரப்பகுதியில் கரையொதுங்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
விமானப்படையின் சுமார் 1500 பேர் வரை அப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க, 270 டொன் கழிவுப் பொருட்கள் இவ்வாறு சேகரிக்கப்பட்டு 9 கொள்கலன்களில் அவை மத்திய சுற்றாடல் அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேநேரம் கடற்படையின் களனி கட்டளைத் தளபதி கொமாண்டர் ஈ.எம்.ஏ. பண்டாரவின் கீழ், கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் நிலையில், லெப்டினன் ஏ.டப்ளியூ.ஏ.ஐ. விஜேகோனின் கீழான படையினர் 485 பேர் அதில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் உஸ்வெட்ட கொய்யா முதல் பமுனுகம வரையிலான 9 கிலோ மீற்றர் கடற் கரையோரப்பகுதியில் இருந்து மட்டும் 584 தொன் கழிவுப் பொருட்களை இதுவரை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனைவிட, கடற்கரையோரங்களில் குவியும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் கலந்த திரவியங்கள் , கழிவுகளை அகற்றும் பணிகளில் 300 பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதன்படி, மொத்தமாக முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த 2620 பேர், கரை ஒதுங்கும் கப்பல் கழிவுகள், பதார்த்தங்களை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான கடற் கரையோரங்களில் சிறிய பிளாஸ்டிக் உருண்டைகள் கரையொதுங்கி வரும் நிலையில் அவை பெரும் சவாலாக மாறியுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு பிரிவினர் கூறுகின்றனர்.
சுமார் 20 மில்லி கிராம் உடைய இவ்வாறான பிளாஸ்டிக் உருண்டைகள் 400 கோடி வரை தீ பரவலைத் தொடர்ந்து கடலுடன் கலந்திருக்கலாம் என சூழலியலாளர்கள் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment