வர்த்தமானியின் பிரகாரம் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமென பெருந்தோட்ட கைக்காசு தொழிலாளர்கள் வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

வர்த்தமானியின் பிரகாரம் 1000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டுமென பெருந்தோட்ட கைக்காசு தொழிலாளர்கள் வலியுறுத்தல்

பெருந்தோட்டங்களில் பதிவு செய்யப்படாத சமயாசமய தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டுமென தொழில் திணைக்களம் அறிவித்துள்ள போதிலும் இதுவரை 700 ரூபா சம்பளமே வழங்கப்படுவதாக அக்கரப்பத்தனையிலுள்ள கைக்காசுத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பெருந்தோட்டங்களில் கைக்காசுக்கு வேலை செய்பவர்கள் என அழைக்கப்படும் சமயாசமயத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் இதுவரை நேர்த்தியாக வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனையிலுள்ள கிரன்லி கீழ் பிரிவு, ஊட்டுவள்ளி, சின்னத்தோட்டம் உள்ளிட்ட தோட்டங்களில் தொழில்புரியும் தமக்கு நாளாந்த சம்பளமாக 700 ரூபாவே வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம், பெருந்தோட்டங்களில் பதிவு செய்யாமல் தொழில் புரியும் சமயாசமயத் தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, தொழில் ஆணையாளர் நாயகத்தினால் பிராந்தியங்களிலுள்ள பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் கடிதமொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பதிவு செய்யப்படாத சமயாசமய தொழிலாளர்களுக்கு சில பகுதிகளில் 1000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படுவதில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தியிடம் வினவிய போது, 1000 ரூபா சம்பள விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணையில் உள்ளமையினால், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயம் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment