கொரோனா மூன்றாம் அலையை சாதாரணமாக இடைபோட வேண்டாம் : இறுக்கமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் : வசதி குறைந்தவர்களை இனங்கண்டு உதவுங்கள் - அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

கொரோனா மூன்றாம் அலையை சாதாரணமாக இடைபோட வேண்டாம் : இறுக்கமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் : வசதி குறைந்தவர்களை இனங்கண்டு உதவுங்கள் - அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்

நூருல் ஹுதா உமர்

கொரோனா காலங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில் சில தவறுகளை மக்கள் விடுகிறார்கள். சில முக்கிய இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் மக்கள் அசட்டையாக இருக்கிறர்கள் என்பதுடன் கொரோனா ஒழிப்புக்காக பாடுபடுகின்ற நாம் எமக்கு அருகில் வாழும் வசதி குறைந்த தேவையுடையவர்களை இந்த காலகட்டத்தில் இனங்கண்டு அவர்களுக்கு தாமாக முன்வந்து உதவும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

இன்று (15) காலை அம்பாறை ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த கால இரண்டு கொரோனா அலைகளிலும் நாங்கள் பெரிதாக பாதிக்கப்படாமல் இருந்தாலும் இப்போது இலங்கையில் வேகமாக பரவி வரும் மூன்றாவது அலை மிக மோசமான பாதிப்புக்களை உண்டாக்கும் தன்மை கொண்டது என்பதை சுகாதாரத் துறையினர் எமக்கு அறிவுறுத்தி வருகின்றனர். 

இதனுடைய பக்கவிளைவுகளை மக்கள் அறிந்து, விளங்கியவர்களாக நடக்க வேண்டும் எனும் அறிவுறுத்தலை பள்ளிவாசல்கள் ஊடாகவும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொலிஸ், பாதுகாப்பு படையினர், மாநகர சபை ஆகியோரின் உதவியுடனும் மக்களுக்கு நாங்கள் அறிவித்து வருகிறோம்.

இந்த அறிவித்தல்களை ஏற்று பெரும்பாலான மக்கள் முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றி, கைகளை கழுவி சுகாதார வழிமுறைகளை செயற்படுத்தி பாதுகாப்பான முறையில் தமது குடும்பங்களையும், பிள்ளைகளையும் காத்து வருகிறார்கள். 

ஆனாலும் சில தவறுகளை மக்கள் விடாமலும் இல்லை. சில முக்கிய இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் மக்கள் அசட்டையாக இருக்கிறர்கள். இந்த விடயத்தில் மக்கள் உரியமுறையில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையர்களாக ஒன்றிணைந்து கொரோனாவை வெல்ல வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.

அதேநேரம் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட நேரங்களில் அரசாங்கம் சில உதவிகளை ஏழை மக்களுக்கு செய்யும். ஆனால் தேவையுடைய எல்லா மக்களுக்கும் அரசின் உதவிகள் கிடைக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றே வரும். 

கொரோனா ஒழிப்புக்காக பாடுபடுகின்ற நாம் எமக்கு அருகில் வாழும் வசதி குறைந்த தேவையுடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தாமாக முன்வந்து உதவும் மனநிலையை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதுடன் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் செயலாற்றி எமது நாட்டை கொரோனாவிலிருந்து பாதுகாக்க சகலரும் உதவுவோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment