சிலிண்டரில் காணப்படுகின்ற எரிவாயுவின் அளவைக் குறைத்து விலையை அதிகரித்து பாரிய மோசடி இடம்பெறுகிறது - கபிர் ஹாசிம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

சிலிண்டரில் காணப்படுகின்ற எரிவாயுவின் அளவைக் குறைத்து விலையை அதிகரித்து பாரிய மோசடி இடம்பெறுகிறது - கபிர் ஹாசிம்

எம்.மனோசித்ரா

கொவிட் தொற்றின் காரணமாக நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் எரிவாயு சிலிண்டரில் காணப்படுகின்ற எரிவாயுவின் அளவைக் குறைத்து, அதன் விலையை அதிகரித்து பாரிய மோசடி இடம்பெறுகிறது. இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் 18 லீற்றர் எனக் குறிப்பிட்டு, அந்த சிலிண்டரில் எரிவாயுவின் அளவை 9 கிலோ கிராமாகக் குறைத்து கூடிய விலையில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் 121 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோ எரிவாயுவின் விலை தற்போது 155 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றி அரசாங்கம் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

விலை தொடர்பில் நிர்ணயிக்கக்கூடிய அதிகாரம் உடைய நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளரும் இதன் மூலம் பாரிய மோசடி இடம் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாகக் குறிப்பிட்டு, அதன் விலையை நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி நிச்சயம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த நடைமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.

விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதற்கு துணைபோயுள்ளாரா? இந்த எரிவாயு சிலிண்டரில் கலப்புக்கள் மாற்றமடைந்துள்ளதால் இதன் விலை மாற்றமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் நுகர்வோர் அதிகாரசபை அதனை மறுத்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே இந்த மோசடி இடம்பெற்றுள்ளமை தெளிவாகிறது. எனவே இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ள சகல அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment