இந்தியாவைவிட மோசமான நிலைமை இலங்கையில் காணப்படுகிறதா?, மரணங்களின் எண்ணிக்கை நிலைவரம் மறைக்கப்படுகின்றதா? - நளின் பண்டார - News View

Breaking

Post Top Ad

Saturday, May 8, 2021

இந்தியாவைவிட மோசமான நிலைமை இலங்கையில் காணப்படுகிறதா?, மரணங்களின் எண்ணிக்கை நிலைவரம் மறைக்கப்படுகின்றதா? - நளின் பண்டார

எம்.மனோசித்ரா

இந்தியாவைவிட மோசமான நிலைமை இலங்கையில் காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் தற்போது நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் பெருமளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாறு அச்சுறுத்தலான நிலைமை உருவாகியுள்ள போதிலும்கூட, கொவிட் கட்டுப்படுத்தலுக்காக அரசாங்கத்தினால் முறையான வேலைத்திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றின் காரணமாக பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையின் உண்மை நிலைவரம் மறைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் சில பிரதேசங்களில் பதிவாகின்ற மரணங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்படுவதில்லை. கொவிட் விவகாரத்தில் அரசாங்கம் இவ்வாறு பொறுப்பின்றி செயற்படுவது பொறுத்தமற்றது.

நாம் எதிர்க்கட்சியாகவுள்ளதால் எமக்கென வரையறைகளுள்ளன. எனினும் அந்த வரையறைகளுக்குள் கொவிட் நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதாச முன்னெடுத்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தில்கூட மக்கள் நலனை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கிடைக்கப்பெற்ற 12 இலட்சம் தடுப்பூசிகளில் 9 இலட்சம் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த 9 இலட்சத்திற்குள் உள்ளடங்குபவர்கள் யார் என்பது மாயமாகவுள்ளது. காரணம் அரசாங்கத்தின் சகாக்கள் பலரே இதில் உள்ளடங்குகின்றனர்.

முதற்கட்டமாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 6 இலட்சம் பேருக்கு இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பது? உரிய காலத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ள மக்களின் உயிர் அச்சுறுத்தலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

அரசாங்கம் முறையாக செயற்படாததோடு, துறையில் நிபுணத்துவம் பெற்றவரான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவின் செயற்பாடுகளுக்கும் சன்ன ஜயசுமண போன்றோரால் இடையூறு விளைவிக்கப்படுகிறது.

இவற்றினடிப்படையில் பார்க்கும் போது இந்தியாவை விட மோசமான நிலைமை இலங்கையில் காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்கள் பொலிஸாரால் பலவந்தமாக கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களை தனிமைப்படுத்தும் தீர்மானத்தில் சுகாதார தரப்பினருக்கு அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.

இதுதான் ஒரே நாடு ஒரே சட்டமா? பிலியந்தல பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல் விவகாரத்தில் அமைச்சர் காமினி லொக்குகேவின் செயற்பாடுகள் இதற்கு உதாரணம். இவ்வாறான நிலை தொடர்ந்தால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad