தடுப்பூசி காப்புரிமையில் விலக்கு அளிக்க அமெரிக்கா ஆதரவு - மருந்து நிறுவனங்கள் எதிர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

தடுப்பூசி காப்புரிமையில் விலக்கு அளிக்க அமெரிக்கா ஆதரவு - மருந்து நிறுவனங்கள் எதிர்ப்பு

கொரோனா தொற்று தடுப்பு மருந்துக்கான அறிவுசார் சொத்து காப்புரிமைகளை தளர்த்தும் உலக வர்த்தக அமைப்பின் அழைப்புக்கு அமெரிக்கா ஆதரவை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த தளர்வை கொண்டுவர இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இதனை பரிந்துரைத்திருந்தது.

இது எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்தாது என்று மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வாதிட்டுள்ளன. எனினும், ‘அசாதாரணமான சூழலில் அசாதாரணமான நடவடிக்கைகள் தேவை’ என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கத்தரின் டாய் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது பற்றி ஒருமித்த முடிவு ஒன்றை எட்டுவதற்கு உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளின் காப்புரிமையை பெறுவதற்கு கடந்த ஆறு மாதங்களாக முயற்சிக்கும் சுமார் 60 நாடுகளைக் கொண்ட குழுவில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா முன்னின்று குரல் கொடுத்து வருகின்றன.

எனினும் இந்தக் கோரிக்கைக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

எனினும் இது பற்றி டிரம்புக்கு அடுத்து வந்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளார். 

2020 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும் இந்த தடுப்பூசி காப்புரிமையில் தளர்வை கொண்டுவருவதற்கு ஆதரவை வெளியிட்டிருந்தார். இந்த ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதாகவும் கடந்த புதன்கிழமை வெளியான அறிவிப்பு உள்ளது.

கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இது முக்கிய தருணம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பு மருந்து காப்புரிமையில் விலக்கு அளிப்பதன் மூலம் தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் அதனை வாங்குவதற்கு வசதி அற்ற வருவாய் குறைந்த நாடுகளுக்கு வழங்க முடியும் என்றும் இதற்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இதற்கு மருந்து நிறுவனங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இது புதிய கண்டுபிடிப்புகளை தடுக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளன. 

இந்த திட்டம் ஏமாற்றம் தருவதாக மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ‘விலக்கு அளிப்பது என்பது சிக்கலான பிரச்சினை ஒன்றுக்கு வழங்கப்படும் இலகுவான மற்றும் தவறான தீர்வாக உள்ளது’ என்று ஜெனீவாவை தளமாகக் கொண்ட அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment