பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவே பொலிஸாரும், இராணுவத்தினரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள் - அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவே பொலிஸாரும், இராணுவத்தினரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள் - அமைச்சர் சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள். இவர்களின் மனநிலையினை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பயணத்தடை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்;பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரது ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வது இன்றியமையாததாக காணப்படுகிறது.

கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அதனையும் முறையற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வீதியில் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஒரு சில பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன. 

பொதுமக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கடமையில் ஈடுபட வேண்டாம் எனவும் கடினமான முறையில் செயற்பட வேண்டாம் எனவும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையிலும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதியில் கடமையில் ஈடுப்படுகிறார்கள்.

இவர்களுக்கு உணவு உண்ணவும், இயற்கை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் கூட நேரம் கிடைக்காத அளவிற்கு அவர்கள் சேவையில் ஈடுபடுகிறார்கள். ஆகவே பொதுமக்களும் அவர்களின் மனநிலையினை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும். ஆகவே பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இரு தரப்பினரும் அனுசரித்து செயற்ப்ட்டால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது. பொதுமக்களை காட்டிலும் பொலிஸாரும், இராணுவத்தினரும் மிகவும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment