(செ.தேன்மொழி)
சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின், நன்நடத்தைகளைக் கருத்திற்கொண்டு, அவர்கள் குடும்பத்தினருடன் சில தினங்கள் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்டு வரும் வரப்பிரசாதங்கள் அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சிறைச்சாலைகளில் நீண்ட நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நன்நடத்தைகளைக் கருத்திற்கொண்டு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சில தினங்கள் வாழ்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் விசேட வாய்ப்பு வழங்கப்படும்.
நீண்ட காலமாக சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள கைதிகள், தங்களது தண்டனை காலத்தில் இரு வருட காலத்தை பூர்த்தி செய்ததும், அவர்களது நற்செயல்களை கருத்திற் கொண்டு ஆரம்பகட்டமாக ஒரு வாரம் அவர்களது குடும்பத்தினருடன் தங்கியிருக்க வாய்ப்பளிக்கப்படும். பின்னர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 10-14 தினங்கள் வரை குடும்பத்தினருடன் தங்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
கைதிகளின் நன்நடத்தை தொடர்பில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அது தொடர்பில் விடய பொறுப்பு அமைச்சரிடம் அறிவித்து, அவருடைய அனுமதியுடனே இந்த வரப்பிரசாதம் வழங்கப்படும்.
எனினும் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அதனை செயற்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment