விமானா நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

விமானா நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்

நீதிமன்றம் அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப், லண்டன் செல்லவிடாமல் மத்திய புலனாய்வு அமைப்பு தடுத்து நிறுத்தியது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் (வயது 69). இவர்தான் தற்போது நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஒருமுறை வெளிநாடு செல்வதற்கு லாகூர் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. ஆனால் அவர் கத்தார் வழியாக லண்டன் செல்வதற்காக லாகூர் விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தபோது, அவரை போக விடாமல் எப்.ஐ.ஏ. (மத்திய புலனாய்வு பிரிவு) தடுத்து நிறுத்தி விட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தி தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது இன்று (நேற்று) காலையில் கத்தார் வழியாக லண்டனுக்கு செல்வதற்காக விமானம் ஏற ஷெபாஸ் ஷெரீப், லாகூர் விமான நிலையம் வந்தார். ஆனால் அவரை எப்.ஐ.ஏ. (மத்திய புலனாய்வு பிரிவு) போக விடாமல் தடுத்து நிறுத்தினர்.

ஷெபாஸ் ஷெரீப், வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளித்து லாகூர் உச்ச நீதிமன்ற உத்தரவு போட்டபோது, 2 எப்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் இருந்தார்கள். அவர் கத்தார் செல்ல வேண்டிய விமானத்தின் எண்ணைக்கூட நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஆனால் ஷெபாஸ் ஷெரீப் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து மற்றொரு பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தடைப்பட்டியல் சரி செய்யப்படவில்லை. இது தற்போதைய அரசின் தீய நோக்கத்தைக்காட்டுகிறது.

இம்ரான் கான் அரசின் முன்னுரிமை மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், சர்க்கரை, கோதுமை வழங்குவதற்கு பதிலாக ஷெபாஸ் ஷெரீப்பின் மீது பாய்ந்துள்ளது. தகவல் துறை அமைச்சர் பவாத் சவுத்ரியும், பிரதமரின் ஆலோசகர் சாஜாத் அக்பரும், நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது, ஷெபாஸ் ஷெரீப்பை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான எல்லா முழு முயற்சிகளையும் எடுப்போம் எனக்கூறி அறிக்கைகள் வெளியிட்டனர். இதில் லாகூர் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது.

அவரை வெளிநாடு செல்வதில் இருந்து தடுத்து இந்த அரசு லாபம் அடையப் போகிறது? அரசு இதற்கு பதில் அளித்தாக வேண்டும். இந்த அரசை மக்கள் நிராகரித்து விட்டது அவர்களுக்கு தெரிந்து விட்டது. எனவே அவர்கள் இப்படி சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் ஒற்றுமையைக் கண்டு அரசு பயப்படுகிறது. பாகிஸ்தான் மக்கள் எங்கள் கட்சிக்கும், நவாஸ் ஷெரீப்புக்கும், ஷெபாஸ் ஷெரீப்புக்கும் அவர்களது சேவைகளுக்கும் ஓட்டு போடுகிறார்கள்.

இம்ரான் கான் மற்றும் அவரது ஆலோசகர் சாஜாத் அக்பருடைய உத்தரவுகளால்தான் ஷெபாஸ் ஷெரீப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

No comments:

Post a Comment