உலக சுகாதார அமைப்பின் அனுமதி இல்லாத தடுப்பூசியை மக்களுக்கு ஏற்றக்கூடாது. அவ்வாறு செய்வது பாரிய அநியாயமாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டில்களை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை என்ன? கொவிட் தொடர்பான உண்மைத் தகவல்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் நாட்டுக்கு வருவதற்கு முன்னரே அது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் தெரிவித்து, மக்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும் என தெரிவித்தேன். ஆனால் மக்களுக்கு முகக்கவசம் அணிவித்து மக்களை கஷ்டப்படுத்த தேவையில்லை என தெரிவித்து, அரசாங்கம் எமக்கு சேறுபூசும் நடவடிக்கையை மேற்கொண்டுவந்தது.
அதேபோன்று கொவிட் தொடர்பில் நாங்கள் தெரிவித்த பிரேரணைகளை அரசாங்கம் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதுடன் கொரோனா தொடர்பில் நாங்கள் கதைத்தாலே அதற்கு எதிராக மோசமான வார்த்தைகளால் எம்மை அரச தரப்பினர் விமர்சித்தனர். ஆனால் இன்று கொரோனாவால் நாடும் பாதிக்கப்பட்டு, மக்களையும் அரசாங்கம் கஷ்டத்தில் வீழ்த்தி இருக்கின்றது.
அத்துடன் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி, ஒட்சிசன், வென்டிலேட்டர், அதிதீவிர பிரிவு கட்டில்கள் போன்றவை தேவைப்படுகின்றன. இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகின்றோம். அரசாங்கம் இதுவரைக்கும் எத்தனை அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டில்களை அதிகரித்திருக்கின்றது.
அரசாங்கம் கொரோனாவை வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகின்றது. தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக அரசாங்கம் முட்டியை ஆற்றில் போட்டது. பாணியை அறிமுகப்படுத்தியிருந்தது. அதனால்தான் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியாமல்போனது. தற்போது உலக நாடுகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.
மேலும் தடுப்பூசி வழங்குவதிலும் அரசாங்கம் கொவிட் வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற எஸ்ட்ரா செனிகா தடுப்பூசி இரண்டு தடவையும் வழங்க முடியும் வகையில் பிரித்து வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் முதல் தடவையாக 9 இலட்சம் பேருக்கு வழங்கி இருக்கின்றது. அதனால் 5 இலட்சம் பேருக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கு போதுமான தடுப்பூசி இல்லை.
இதன் காரணமாக அரசாங்கம் உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைக்காத தடுப்பூசிகளை இரண்டாம் கட்டமாக வழங்கப்போவதாக தெரியவருகின்றது. அதனால் இந்த அநியாயத்தை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன் கொவிட் தொடர்பான உண்மைத் தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையை மறைப்பதன் மூலம் நாட்டுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது. உண்மையை வெளியிடுவதால் அரசாங்கத்துக்கு பாதிப்பாக இருக்கும் என்றாலும் கசப்பாக இருந்தாலும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
அதேபோன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. என்றாலும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலையில் பல இலட்சம் ரூபாக்களை செலவழித்து ஹெலிகப்டர்களை கொள்வனவு செய்ய தற்போதைக்கு தேவையில்லை. அதற்கு முன்னர் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment