(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தி ஆளுந்தரப்பினரை விமர்சிக்கும் எதிர்கட்சியாக மாத்திரம் செயற்படும் கட்சியல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு தூதுவர்களின் ஒத்துழைப்புடனும், ஏனையோரின் உதவியுடனும் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதன்போதே எதிர்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்புகூற வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
பல சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளோம். அந்த வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராகவுள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை, அமைப்பாளர் சபை, கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்தும் சேகரிக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
எதிர்த்தரப்பினரை விமர்சிப்பதோடு மாத்திரமின்றி எம்மால் இயன்றவரை மக்களுக்கான சேவையை வழங்குவோம்.
நாட்டு மக்களை வாழ வைப்பதற்கான பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம். அதற்கேற்ப ஐக்கிய மக்கள் சக்தி மக்களையும் இணைத்துக் கொண்டு வெளிநாட்டு தூதுவர்களின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளோம்.

No comments:
Post a Comment