(செ.தேன்மொழி)
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவரும் கைதிகள் தொடர்பான விபரங்களை அவர்களின் உறவினர்களுக்கு அறிவிப்பதற்காக சிறைச்சாலைகளில் கொவிட் தகவல் கேந்திர நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் கைதிகளின் விபரங்களை, அவர்களது உறவினர்கள் அறிந்து கொள்வதற்காக சிறைச்சாலையில் கொவிட் தகவல் கேந்திர நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் குடும்பத்தினர் 011-4677101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
வைரஸ் தொற்றுக்குள்ளான கைதிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இடம், அனுமதிக்கப்பட்ட தினம் மற்றும் அவர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உறவினர்களுக்கு அறிவிக்கப்படும்.
கைதிகள் இறுதியாக சிறை வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளிலும் அந்த விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
மேலும் prison.gov.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து, தொடர்பு கொள்ள வேண்டிய சிறைச்சாலையின் தொலைபேசி இலக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment