வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

ஒருமுறை பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற (single use) பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக சுற்றாடல் அமைச்சின் மூலம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் சிலவற்றை மீறி செஷே பக்கெட்டுக்களை சந்தைப்படுத்திய நிறுவனம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதேவேளை 20 கிராமுக்கு குறைவான நிறையுடைய மருந்து மற்றும் உணவு அல்லாத செஷே பக்கெட்டுக்கள் உட்பட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினாலான 5 தயாரிப்புக்களுக்கு மார்ச் 31 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான கலந்துரையாடல் இரண்டு தினங்களுக்கு முன் சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது. 

இதன்போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுடன் தொடர்புடைய பல உற்பத்திப் பொருட்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்பட்ட நிறுவனங்களை உடனடியாக பரிசோதனை செய்யுமாறு சுற்றாடல் அமைச்சர் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப தான் செயல்படத்தயாராக இல்லை என்று அமைச்சர் கூறினார். 

நமது நாட்டின் சுற்றாடல் பாதுகாப்பிற்காக அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் மற்றும் தீர்மானங்களை அனைத்து தரப்பினரும் செயல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment