மற்றுமொரு ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 11, 2021

மற்றுமொரு ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது

காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை சமூக பொருளாதாரம் ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்துள்ளார்.

“காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி“ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பெசில் ராஜபக்ஷவின் தலைமையிலான இந்த செயலணிக்கு ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் ஒரு ஆளுநர், 14 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 46 பேர் கொண்ட குழு இதில் அங்கம்வகிக்கின்றது.

அமைச்சர்களான ஆர்.எம்.சி.பீ.ரத்னாயக்க, சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அழுத்கமகே, ரமேஷ் பத்திரன, ஆளுநர் அனுராதா யஹம்பத், இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, அருந்திக்க பெர்ணாண்டோ, ரொஷான் ரணசிங்க, கனக ஹேரத், ஜானக்க வக்கும்புர, மொஹான் டி சில்வா, விமலவீர திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சதாசிவம் வியாழேந்திரன், டி.பி.ஹேரத், சசிந்திர ராஜபக்ஷ, நாலக்க கொடஹேவா, சீத்தா அரம்பேபொல, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுளா திசாநாயக்க, கலாநிதி எம்.டப்பிளியு.என்.தர்மவர்தன, ஜயம்பதி மொல்லிகொட, ஜயந்த விக்கிரமசிங்க, பேராசிரியர் சுதிரா ரண்வல, கலாநிதி ஜீ.ஏ.எஸ்.பிரேமகுமார, விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய, கலாநிதி டி.எம்.ஜே.பி.சேனாநாயக்க, பேராசிரியர் எஸ்.ஆனந்த குலசூரிய, கலாநிதி டி.எல்.குணருவன், பேராசிரியர் பி.ஐ.யாப்பா, கலாநிதி எச்.எம்.ஜீ.எஸ்.பி.ஹிட்டிநாயக்க, கலாநிதி அசீஸ் முபாரக், கலாநிதி யசந்தா மாபட்டுன, கலாநிதி கிரிஷ் தர்மகீர்த்தி, சசித்ரா யாப்பா, விக்கி விக்கிரமதுங்க, ஹர்மந் குணரத்ன, தம்மிக்க கொப்பேகடுவ, தேவக விக்கிரமசூரிய, ஜீவிக்க அத்தபத்து, தில்ஷான் பெர்ணாந்து, மொஹமட் அனிஸ் ஜூனைட், திலித் ஜயவீர, விஜித் வெலிகல ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.

காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை சமூக பொருளாதார மாதிரியை நோக்கி இலங்கையை மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முன்வைத்த அமைச்சரவை விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள உரப் பயன்பாடு காணி, உயிர் பல்வகைத் தன்மை, திண்மக் கழிவுகள், கைத்தொழில், மீள்ப்பிறப்பாக்க சக்திவளம், குடியேற்றம், நகர மற்றும் சுற்றாடல் கல்வி ஆகிய விடயங்கள் குறித்து கருத்திற்கொண்டு அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு பாரிய மக்கள் ஆணை கிடைக்கப் பெற்றுள்ளது.

தற்போது இரசாயன உரம், களைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகளுக்காக பெருமளவு செலவிட வேண்டியுள்ளது. இதன் மூலம் ஆறுகள், குளங்களின் நீர் மாசடைதல், மண் வளம் மாசடைவதுடன் இதனூடாக மக்களுக்கு ஏற்படும் நோய்கள் காரணமாக அவர்களது சுகாதார நிலைமைகள், வாழ்வாதார வழிகள் பாதிக்கப்படுகின்றன. நச்சுத்தன்மையற்ற உணவு பொருட்களை பெற்றுக் கொள்வதில் கஷ்டங்கள் அதிகரித்து வருகின்றது.

நாட்டுக்கு வெளியே செல்லும் அந்நியச் செலாவணியை நாட்டில் மீதப்படுத்துதல் உருவாகி வரும் பூகோள பொருளாதார மாதிரிகளுக்குள் அதன் உச்ச நன்மையை நாட்டுக்கு பெற்றுக் கொள்ளுதல், சூழல்நேய சமூக பொருளாதார மாதிரிக்கு மக்களை பழக்கப்படுத்துதல் உள்ளிட்ட சூழல்நேய விடயங்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. 

சுற்றாடலை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள மேலும் 24 விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தி செயற்படுவது இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

விவசாயத்திற்காக இரசாயன உரம் களைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக சேதன உர உற்பத்திகளை பயன்படுத்தி முழுமையாக இரசாயன விவசாய நடவடிக்கையிலிருந்து இயற்கை விவசாய நடவடிக்கைகளுக்கு மாறுவதற்கான வீதி வரைவு ஒன்றை தயாரிப்பது செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும்.

பொருளாதார புத்தெழுச்சி, வறுமையை ஒழிப்பதற்கான செயலணி மற்றும் கிராமத்துடன் உரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணியுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படுமாறு இந்த செயலணிக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment