70 கர்ப்பிணி தாய்மார்கள், ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கும் கொவிட் தொற்று - விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

70 கர்ப்பிணி தாய்மார்கள், ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கும் கொவிட் தொற்று - விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இதுவரையில் சுமார் 70 கர்ப்பிணி தாய்மாருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அத்தோடு பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உள்ளிட்ட ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கர்பபிணி தாய்மார் மற்றும் குழந்தைகள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இதுவரையில் சுமார் 70 கர்ப்பிணி தாய்மாருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கர்ப்பிண தாய்மார் இயன்றவரை தமது போக்குவரத்துக்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் பெருமளவில் ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம். கர்ப்பிணி தாய்மார் மாத்திரமின்றி பிறந்து ஒரு மாதமேயான குழந்தைகள் முதல் 3, 5, 7 மாத குழந்தைகளும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே குழந்தைகள் உள்ள வீடுகளில் ஏதேனுமொரு தொற்று அறிகுறி உள்ள நபர்கள் இருப்பார்களாயின் எக்காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளை அவர்கள் அருகில் விட வேண்டாம். அத்தோடு குழந்தைகள் சிறுவர்களை அநாவசியமாக வீட்டிலிருந்து வெளியிடங்களுக்கு அனுப்புவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளக் கூடிய வகையில் அவர்களுக்கான உணவுகள் வீடுகளிலேயே சமைத்து வழங்கப்பட வேண்டும். கடைகளில் தற்காலிகமாக தயாரிக்கப்படும் உணவுகளை வழங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad