வாழைச்சேனையில் 48 வருடங்களுக்கு பின் மீண்டும் பிறப்பு பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கினார் பதிவாளர் நாயகம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

வாழைச்சேனையில் 48 வருடங்களுக்கு பின் மீண்டும் பிறப்பு பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கினார் பதிவாளர் நாயகம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக நிருவாக அலகிற்குட்பட்ட வாழைச்சேனை பிரிவின் இறப்பு, பிறப்பு மற்றும் ஏறாவூர் கோறளைப்பற்று விவாக (பொது) பதிவாளர் பிரிவில் பதிவு செய்வதற்கு பதிவாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யும் வகையில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற பதிவு செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்ஜித், மேலதிக மாவட்ட பதிவாளர் இ.சசிகுமார், வாழைச்சேனை விவாக, பிறப்பு இறப்பு பதிவாளர் திருமதி.த.சிவயோகராஜா, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு பிறப்பு பதிவு வைக்கப்பட்டு, பெற்றோர்களிடம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

1973.09.07ம் திகதி தொடக்கம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தனின் முயற்சியின் பயனாக மீண்டும் 2021.05.21ம் திகதியில் இருந்து வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad