சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்கவும் - கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவும் : அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்கவும் - கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவும் : அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்

நூருல் ஹுதா உமர்

கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொழிலாளர் தின நிகழ்வுகளை கடந்த மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக நடத்த முடியாமல் போகியுள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் தொழிலாளர்களின் நிலை மோசமாக உள்ளது. அரச ஊழியர்களின் நலன்கருதி அரசு சம்பளத்தை 25000 ரூபாவால் அதிகரிக்க முன்வர வேண்டும். அது போலவே ஓய்வூதியம் பெறுவோரின் தொகையும் 15000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும். விலைவாசி அதிகரிப்பால் கஷ்டப்படும் அரச ஊழியர்களின் நலனில் கடந்த நல்லாட்சியும் கவனத்தில் எடுக்கவில்லை. இந்த அரசும் அக்கறை செலுத்தாமை கவலையளிக்கிறது. இந்த அரசாங்கத்தை நிறுவ எங்களின் தொழிற்சங்கம் முதல் நாட்டில் உள்ள முக்கிய எல்லா தொழிற்சங்கமும் கடுமையாக கஷ்டப்பட்டுழைத்தோம் என்ற ரீதியில் இந்த மே தின கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கும் இந்த கோரிக்கையை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் கேட்டுக் கொண்டார்.

மே தினத்தை முன்னிட்டு கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற விசேட பூஜையை தொடர்ந்து கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர் அண்மையில் வெளியாகியுள்ள பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றுநிருபத்திற்கிணங்க யாராலும் நியமனம் வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. 

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் என யாருமே சிற்றூழியர் நியமனம் கூட வழங்க முடியாத நிலை இப்போது உருவாகியுள்ளது. 

எங்களின் தொழிற்சங்க போசகராக உள்ள அமைச்சர் டக்ளஸை அண்மையில் சந்தித்து யுத்தம், அனர்த்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நியமனம் வழங்கப்பட வேண்டிய வடக்கு கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசியுள்ளோம்.

எங்களின் மே தின கோரிக்கைகளாக இந்த ஊடக சந்திப்பின் வாயிலாக அரசுக்கு நாங்கள் வடக்கு கிழக்கை இணைத்து சுய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றும் புதிய அரசியலமைப்பில் மாநில சுய ஆட்சியை வலியுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். 

கடந்த 30 வருடங்களாக தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் நலனுக்காக சேவை செய்யும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரிக்கை முன்வைக்கிறோம். 

பல ஆணைக்குழுக்களில் நானும் சாட்ச்சியம் வழங்கினேன் எதுவும் நடக்கவில்லை. தும்புத்தடி வாங்குவதற்கும் கல்முனை செயலகத்தில் கையேந்தும் நிலை இருக்கிறது. முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த தரமுயர்வை விரும்பாது தடுத்து வருகிறார்கள். எங்களுக்கு இனவாதமோ, பிரதேச வாதமோ இல்லை. தம்புள்ளை அழுத்கமவில் முஸ்லிங்கள் பாதிக்கப்பட்டபோது நாங்களும் அவர்களுக்காக குரல்கொடுத்தோம்.

கல்முனை ஆதார வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த கோரி இரண்டரை தசாப்தங்களாக போராடி வருகிறோம். இதை அரசு விசேட கவனம் எடுத்து அமுல்படுத்த முன்வர வேண்டும் என்பதுடன் வடக்கின் ஒட்டுசுட்டான், கண்டாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு புதிய உள்ளுராட்சி சபையை உருவாக்க வேண்டும். 

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுநரை நியமிக்குமாறு இந்த அரசாங்கத்தை நிறுவ எங்களின் தொழிற்சங்கம் கடுமையாக கஷ்டப்பட்டுழைத்தோம் என்ற ரீதியில் இந்த மே தின கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கும் இந்த கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad