இவ்வருட இறுதியில் மாகாண தேர்தல்களை நடத்துவது சாத்தியப்படலாம், எனினும் உறுதியாகக்கூற முடியாது என்கிறார் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

இவ்வருட இறுதியில் மாகாண தேர்தல்களை நடத்துவது சாத்தியப்படலாம், எனினும் உறுதியாகக்கூற முடியாது என்கிறார் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வருட இறுதியில் நடத்துவது சாத்தியப்படலாம். எனினும் அதனை உறுதியாகக்கூற முடியாது. மாகாண சபை சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னர் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மாகாண சபைத் தேர்தலை கடந்த அரசாங்கமே காலம் தாழ்த்தியது. நாம் எமது கடந்த ஆட்சிக் காலங்களிலும் கூட சகல தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்தியுள்ளோம். 

எமது ஆட்சிக் காலத்தில் உரிய காலத்திற்கு முன்னதாகவே தேர்தல்கள் நடத்தப்பட்டதே தவிர ஒருபோதும் காலம் தாழ்த்தப்படவில்லை. எனவே விரைவில் தேர்தலை நடத்துவதே எமது எதிர்பார்ப்புமாகும். அதற்கமைய இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலை நடத்துவது சாத்தியப்படலாம் என்றார்.

இதன் போது ஆளுந்தரப்பில் பங்காளி கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் சு.க. மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளமை தொடர்பில் கேட்கப்பட்ட போது அவற்றுக்கு பதிலளித்த அமைச்சர்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் 12 கட்சிகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இவற்றுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது சாதாரணமானதொரு விடயமாகும். எனினும் இந்த முரண்பாடுகளுக்கு இனக்கப்பாடுகள் ஊடாக தீர்வு காணப்படும்.

எத்தகைய முரண்பாடுகள் ஏற்பட்டாலும் தேர்தல்களின் போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து அவற்றுக்கு முகங்கொடுக்கும். இதனை அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கான நடைமுறையாகக் கருத முடியாது.

சுதந்திர கட்சி மாத்திரமல்ல, எந்தவொரு கட்சியும் அதன் தனித்துவத்தன்மையை பேணும் வகையில் மே தினக் கூட்டங்களை தனித்து நடத்துவது சாதாரண விடயமாகும். 

எனவே சு.க. தனித்து மே தினக் கூட்டங்களை நடத்தினாலும் பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் அந்த கட்சி சார்பில் பிரிதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றார்.

No comments:

Post a Comment