இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது, பிரயோசனம் அதிகம் என்றதாலேயே பிற்படுத்தினோம் - விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது, பிரயோசனம் அதிகம் என்றதாலேயே பிற்படுத்தினோம் - விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தடுப்பூசியாக முதலாம் கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி ஏற்றப்பட்டவருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கும்போது அஸ்ட்ரா செனிகாவே வழங்க வேண்டும். வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது. தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை தாமதித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தடுப்பூசி முதலாம் கட்டமாக ஏற்றிக் கொண்டவர்களுக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட காலத்தையும் விட சற்று தாமதித்தே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அஸ்ட்ராசெனிகா முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கும்போது, அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றே எமக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

என்றாலும் அதன் பின்னர் இடம்பெற்ற ஆய்வு முடிவுகளின் பிரகாரம் இரண்டாம் கட்ட தடுப்பூசியை 3 மாதங்கள் வரை பிற்படுத்துவதானால் அதன் மூலம் பெறப்படும் பிரயோசனம் அதிகம் என்றே தெரிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரமே நாங்கள் முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றி 10 முதல் 12 வாரங்களுக்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசியை ஏற்றுவதற்கு தீர்மானித்தோம்.

பின்னர் அது 12 முதல் 16 வரங்களுக்குள் வழங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நாளை முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுகின்றது.

அத்துடன் முதலாம் கட்டமாக கொவிட் தடுப்பூசியாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியே நாங்கள் வழங்கினோம். அவ்வாறு முதலாம் கட்டமாக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி ஏற்றப்பட்டவருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கும்போது அஸ்ட்ராசெனிகாவே வழங்க வேண்டும்.

வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது. தற்போது எமது கைவசம் இருக்கும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போதுமானதாக இல்லை.

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையிலும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட 3 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எந்தவொரு தடுப்பூசியை ஏற்றிக் கொண்டாலும் அதனால் பக்கவிளைவு ஏற்படலாம். என்றாலும் இந்த தடுப்பூசியை ஏற்றிக் கொண்டதால்தான் அந்த மரணங்கள் ஏற்பட்டதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இருந்தபோதும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை தொடர்ந்து வழங்குமாறு உலக சுகாதார அமைப்பும் ஐரோப்பிய மருத்துவ சங்கமும் தெரிவித்திருக்கின்றது. ஏனெனில் தடுப்பூசியை பெறாவிட்டால் மரணிப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

No comments:

Post a Comment