மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயரின் பூதவுடல் நல்லடக்கம்! - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயரின் பூதவுடல் நல்லடக்கம்!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடல் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று திங்கட்கிழமை (5) மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு துக்க தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.

வீதிகள், வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிற கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு ஆயருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள மக்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, இலங்கை ஆயர் மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி, கொழும்பு பேராயர் மற்றும் பிரதமர் ஆகியோரின் இரங்கல் செய்திகள் இதன்போது வாசிக்கப்பட்டன.

இதனையடுத்து, ஆயரின் திருவுடல் பேராலயத்திற்குள் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர பகுதியில் அமைக்கப்பட்ட மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உருவச் சிலையை மாலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை திறந்து வைத்தார்.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81ஆவது வயதில் கடந்த முதலாம் திகதி நித்திய இளைப்பாறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad