பேராயரின் கருத்துக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவானவை - அமைச்சர் சரத் வீரசேகர முஸ்லிம்களை குற்றவாளிகளாக காண்பிக்க முயற்சி : அருட்தந்தை சக்திவேல் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

பேராயரின் கருத்துக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவானவை - அமைச்சர் சரத் வீரசேகர முஸ்லிம்களை குற்றவாளிகளாக காண்பிக்க முயற்சி : அருட்தந்தை சக்திவேல்

(நா.தனுஜா)

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவானவையாகவும் தமிழ் மக்களைப் புண்படுத்தும் வகையிலும் இருக்கின்றன என்று தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

1995 ஆம் ஆண்டில் நவாலியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போது மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஆயர்கள் பேரவையும் அமைதி காத்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் வெளியிடப்பட்ட கருத்தானது, இவ்விடயத்தில் முஸ்லிம்களை குற்றவாளிகளாகக் காண்பிப்பதற்கான முயற்சியாகும். 

எனினும் பாராளுமன்றத்தில் இடம்பெறும் உரைகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் விமர்சனங்களிலிருந்து இது விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் மேலாக ஒரு சக்தி இயங்குகின்றது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது. 

எனினும் அவர்கள் யார் என்பது குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்படவில்லை. அதேபோன்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவானவையாகவே இருக்கின்றன. 

இந்நிலையில் தற்போது அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்தை அவர் ஏற்றுக் கொண்டால், முஸ்லிம்கள் மீது அவர் குற்றஞ்சாட்டுவது போன்ற நிலையே உருவாகும். எனவே இவ்விடயத்தில் அவர் மிகுந்த அவதானத்துடனும் நடுநிலைமையுடனும் செயற்பட வேண்டும்.

மேலும் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் செயற்பாடுகள் தமிழ் மக்களைப் புண்படுத்துபவையாக அமைந்துள்ளன. ஏனெனில் 1995 ஆம் ஆண்டு நவாலியில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றபோது, அது தமிழர்களின் மண்ணில் இடம்பெற்ற சம்பவம் என்பதால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஆயர்கள் பேரவையும் அமைதி காத்தனர். 

அதேபோன்று இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அருட்தந்தைகள் தொடர்பிலும் முகாம்களில் அடைக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்கள் தொடர்பிலும் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வாய்திறக்கவில்லை. நீதிக்கான குரல் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்குமானதாக இருக்க வேண்டும்.

ஆயர் இராயப்பு ஜோசப் 2009 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் எங்கே என்ற கேள்வியை முன்வைத்தது சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டியது. அதனால் அவரை பிரிவினைவாதி என்றும் பயங்கரவாதி என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்றும் குறிப்பிட்டபோது மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஆயர்கள் பேரவையும் அமைதிகாத்ததுடன் இராயப்பு ஜோசப்பை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள். 

இப்போதும் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை இல்லாதிருப்பது அவரின் ஒருபக்கச்சார்பான போக்கையே வெளிப்படுத்தியுள்ளது. அவருடைய செயற்பாடுகள் தமிழ் மக்களைப் புண்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment