கொவிட் பரவலைக் காரணம் காட்டி ஆடைத் தொழிற்சாலை நிர்வாகங்கள் ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்கின்றன - News View

Breaking

Post Top Ad

Friday, April 2, 2021

கொவிட் பரவலைக் காரணம் காட்டி ஆடைத் தொழிற்சாலை நிர்வாகங்கள் ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்கின்றன

(செ.தேன்மொழி)

கொவிட் பரவலைக் காரணம் காட்டி ஆடைத் தொழிற்சாலை நிர்வாகங்கள் ஊழியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயற்படுகின்றன. எனவே ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்ககப்பட வேண்டும் என்று சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு - ஜெய்க் ஹில்டனில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொவிட்19 வைரஸ் பரவலை காரணம் காட்டிக் கொண்டு, மூன்று இலட்சம் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

இந்நிலையில் வர்த்தக நாமத்தினால் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை புறக்கணித்து ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் உரிமைகளை பறித்து வருகின்றது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தொடக்கம் உலகளாவிய ரீதியில் கொவிட்19 வைரஸ் பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், இதனால் உலகளாவிய ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்களிப்பை வழங்கிய ஆடை மற்றும் காலணி உற்பத்தித்துறையை சார்ந்த மூன்று இலட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

புள்ளிவிவரங்களுக்கமைய 2020 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இலங்கையில் கொவிட்19 தொற்று உச்சநிலையிலிருந்ததுடன், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களில் சுமார் 55 ஆயிரம் பேர் தொழில் மற்றும் அது சார்ந்த ஏனைய வசதிகளை இழந்துள்னர்.

அவர்களுடைய சராசரி ஊதியத்தில் 40 சதவீதம் குறைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், சுமார் 24 மில்லியன் அமெரிக்க டொல்கள் அவர்களுக்கு கிடைக்கப் பெறாமல் போயுள்ளது.

அரசாங்கம், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நெருக்கடிக்கு தீர்வு காண முத்தரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட நிலையில், கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதிலும், தொழிற்சாலையின் நிர்வாகப் பிரிவு அதற்கு புறம்பாகவே செயற்பட்டு வருகின்றது.

உலகளாவிய அவசர நிலைமையின் போது நாட்டின் பொருளாதாரம் நிலையான தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

எனினும் ஊழியர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய தொழிற்சாலை நிர்வாகப் பிரிவினர் தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை புறக்கணிக்கின்றமை குறித்து நாங்கள் எங்களின் எதிர்ப்பை வெளியிடுகிறோம்.

தொழிற்சாலை உரிமையாளர்களினால் கூட்டாக தவிர்க்கப்பட்ட குறைந்தப்பட்ட நிபந்தனைகளாக, தொழில் அமைச்சினால், முத்தரப்பு பணிக்குழு தீரமானத்தின்படி கொவிட்19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக இரு தரப்பு குழுவை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள தவறியமை, மேம்படுத்தப்பட்ட நிபந்தனைகளுக்காக கூட்டாக செயற்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட விரோதமான பழிவாங்கல், தொழிலாளர்களுக்கு வைரஸ் தொற்று பரவியமை சமாந்தரமாகவோ அல்லது கூடிய ஊதியத்தை வழங்கத் தவறியமை மற்றும் ஊழியர்களின் வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கத் தவறியமை என்பன விளங்குகின்றன.

இந்நிலையில், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் கட்டாயமாக அவசியப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அவற்றைப் பாதுகாத்து உறுதிப்படுத்த வேண்டும் என்பது எமது எண்ணமாகும்.

உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே உடனடி, உண்மையான ஒத்துழைப்பு இல்லாத நிலையில், உலகளாவிய ஆடை உற்பத்தி நாமத்தினால் பொறுப்பேற்கத் தவறியதனால், இலங்கையின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

தற்போதைய நெருக்கடி நிலைமையை சிறப்பாக தீர்ப்பதற்காக வர்த்தக நாமம் மற்றும் வர்த்தகர்கள் தங்களின் விநியோகஸ்தர்கள் மற்றும் இலங்கையின் தொழிற்சங்களுடன் தொடர்புகொள்வது அத்தியாவசியமானது. நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக தொழிலாளர்களுக்கு உதவும் திட்டத்தை உருவாக்குவதும் அவசியமாகும்.

வர்த்தக நாமம் மற்றும் ஒன்றிணைந்த ஆடைத் தொழிற்துறை சங்க ஒன்றியம் (JAAF) ஊழியர் பிரதிநிதிகளுடன் ஒரு தீவிர விவாதத்தைத் தொடங்க வேண்டும் என்றும், ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தற்போதுள்ள நடைமுறைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் .

இந்நிலையில், இந்த கோரிக்கைகளுக்கு சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் சார்பில் நான் கைச்சாத்திட்டுள்ளதுடன், சுதந்திரத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர, தலைவர் பாலித்த அதுகோரள மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் லீனஸ் ஜெயதிலக்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதுடன், ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்காமல் அவர்களது பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad