நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, April 18, 2021

நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு, அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் - ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் அபிவிருத்தியில் கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இந்த முக்கியத்துவம் மிக்க வேலைத்திட்டத்தை நாட்டின் சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும், அரசியலமைப்பிற்கு முரணற்ற வகையிலும் முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பான முதலாவது சட்ட மூலம் நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பரில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக அந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்தன. அதன் பின்னர் 2019 ஆகஸ்ட் - செப்டெம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் முதலில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டுமொரு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் காணப்பட்ட விடயங்களை உள்ளிடக்கியே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட குழுவினால் கடந்த ஆண்டு ஜூனில் மற்றொரு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஜனாதிபதியால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுகிறது.

அதில் துறைமுக நகர ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பாராளுமன்றத்திற்கும் அரசியலமைப்பிற்கும் அப்பாற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனத்திலும் ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்படக் கூடிய நிலைமையே காணப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகரத்தில் உலகின் பிரதான நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை நிறுவும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆனால் பாராளுமன்றத்திற்கும் சட்டத்திற்கும் அப்பாற்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகள் காரணமாக இந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா என்பது சந்தேகத்திற்குரியதாகும்.

இதன் மூலம் துறைமுக நகர வேலைத்திட்டத்தில் எதிர்பார்த்த இலக்கில் தோல்வியடைக் கூடும். எனினும் அவ்வாறு தோல்வியடைவதை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்க்கவில்லை.

நாம் ஐக்கிய மக்கள் சக்தியினர் என்ற போதிலும், இலங்கையர்கள் என்ற ரீதியிலேயே சிந்திக்கின்றோம். எனவேதான் நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை கருத்திற் கொண்டு பிரயோசனமான விமர்சனங்களை முன்வைக்கின்றோம்.

எனவே தனக்கு தேவையான வகையில் சட்டங்களை உருவாக்கி, அரசியலமைப்பை மீறி செயற்பட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

2024 அல்லது 2025 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றும் போது கொழும்பு துறைமுக நகர் பயனற்ற நிலப்பரப்பாக மாற்றமடைவதை நாம் விரும்பவில்லை என்றார்.

No comments:

Post a Comment