இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார் தீனியாவல பாலித்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார் தீனியாவல பாலித்த தேரர்

(எம்.எப்.எம்.பஸீர்)

23 பில்லியன் ரூபா அரச நிதியை, கடந்த 2014 ஆம் ஆண்டு முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரல், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர உள்ளிட்ட 6 பேரை பிரதிவாதிகளாக பெயரிட்டு உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கும், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர்வுக்கும் எதிராக நிதி முறைகேடு தொடர்பில் உடனடியாக சட்டத்தை அமுல் செய்ய சட்டமா அதிபருக்கு உத்தர்விடுமாறு கோரியே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நுகேகொடை, நாலந்தாராமையின் விகாராதிபதி தீனியாவல பாலித்த தேரரினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவில் பிரதிவாதிகளாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலர் எஸ்.ஆர். ஆட்டிகல, மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, தற்போதைய இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால் அமைச்சரவையின் அனுமதி, அரசின் அனுமதி இன்றி, இலங்கையின் நண் மதிப்பை அதிகரிக்கவென கூறி, சி.ஐ.ஏ. பிரதி நிதியான இமாட் ஷா சுபேரி என்பவருக்கு 6.5 மில்லியன் அமரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக மனுதாரரான தீனியாவல பாலித்த தேரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைவிட ஹெஜின் ஒப்பந்தம் ஊடாகவும் இலங்கைக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதாக மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தரவுக்கும் பல்வேறு நிதி முறைக்கேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டு உள்ளதாகவும், அவருக்கு எதிராக பாராளுமன்ற கோப் குழு ஊடாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்ப்ட்டுள்ளதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

அத்துடன், பி.பீ. ஜயசுந்தர அரச பதவிகளை வகிக்க முடியாது என உயர் நீதிமன்றம் இதர்கு முன்னர் அளித்த தீர்ப்பினையும் மனுதாரர் ஞாபகப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment