மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சமடையத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க மூத்த தலைவரான ஜிதேந்திர சிங் பிரதமர் அலுவலகத்துறை அமைச்சராகவும், பணியாளர் துறை, பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களின் அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஜம்முவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அறிகுறிகளுடன் இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கவனமாக இருங்கள்’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment