உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் 8 சம்பவங்கள் சம்பந்தமான ஆவணங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை இறுதி நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் மாவனெல்லை புத்தர்சிலை உடைப்பு சம்பவம் தொடர்பிலான நபர்களுக்கெதிராக பூர்வாங்க சட்டபூர்வ நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம், பயங்கரவாத விசாரணைகள் திணைக்களம் என்பன 8 இடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
மனிதப் படுகொலை மற்றும் சூழ்ச்சிகளை மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 32 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக 8 சம்பவங்கள் தொடர்பாக 8 ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முன்னிலைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் எதிர்பார்த்துள்ளார்.
மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பதாக வெளியிடப்பட்டது, தற்போது அது தொடர்பில் வழக்கு தொடர்வது சட்டமா அதிபரின் பொறுப்பாகும். பொலிஸார் அவர்களது செயற்பாடுகளை நிறைவேற்றியுள்ள நிலையில் சட்டமா அதிபர் தவிர்ந்த வேறு எவருக்கும் அது தொடர்பில் வழக்கு தொடர முடியாது.
அதற்கு மேலதிகமாக 75 நபர்கள் தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் உள்ளனர். அவர்களுக்கான விசாரணை சம்பந்தமான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும்.
எவ்வாறாயினும் இச்சம்பவங்களின் முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பில் நாம் விசாரணைகளை நிறைவுசெய்து அதற்கான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளோம்.
அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கர்தினால் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, குறிப்பாக ஆலயங்கள் இலக்கு வைக்கப்பட்மைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அடிப்படைவாதமே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment