ஆயுத பயிற்சி பெற்ற 350 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடமாடுவதாக தகவல் : இவர்களில் இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? - அருட்தந்தை சிறில் காமினி - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

ஆயுத பயிற்சி பெற்ற 350 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடமாடுவதாக தகவல் : இவர்களில் இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? - அருட்தந்தை சிறில் காமினி

(எம்.மனோசித்ரா)

தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 15 அடிப்படைவாத அமைப்புக்களில் சுமார் 350 இஸ்லாமிய இளைஞர் யுவதிகள் அடிப்படைவாத, வன்முறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு இறந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எஞ்சியோரில் மிகக் குறுகியளவானோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் சஹ்ரான் என்பவரால் தௌஹித் ஜமாஅத் அமைப்பினால் அடிப்படைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

இதனுடன் தொடர்புடைய 15 அமைப்புக்கள் நாட்டில் செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைப்புக்களால் இஸ்லாம் இராச்சியம், ஏனைய மதங்களை அழித்தல், இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்காக அவர்களை பழிவாங்குதல் உள்ளிட்ட 5 விடயங்கள் பரப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் பாரதூரமான அடிப்படைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் 350 இஸ்லாம் இளைஞர் யுவதிகள் இதில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு இவர்களுக்கு டி 56 ரக துப்பாக்கியை உபயோகிப்பதற்கும், வெடி பொருட்கள் தொடர்பிலும், குண்டுகளை தயாரிப்பது தொடர்பிலும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. குறித்த 350 இளைஞர் யுவதிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவினர் தற்கொலை குண்டுதாரிகளாகவும், ஏனையோர் ஆயுதமேந்தி போராடுபவர்களாகவும் உள்ளனர்.

குறித்த 350 பேரும் அடிப்படைவாதம், வன்முறை, தீவிரவாத செயற்பாடுகளில் முழுமையான பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் மாத்திரமே இதுவரையில் உயிரிழந்திருக்கக்கூடும். எஞ்சியோர் நாட்டின் பல பகுதிகளிலும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் இதுவரையில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? 

இது இவ்வாறிருக்க தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 400 வாள்கள் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிலையில் நாடு பாதுகாப்பான நிலையிலேயே உள்ளது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் ?

இவை அனைத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள விடயங்களாகும். நாடு தற்போது பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளது.

இஸ்லாமிய பாட புத்தகங்களில் 10 - 13 ஆம் வகுப்புக்களுக்கு வஹாப்வாத கற்கை நெறி கற்பிக்கப்படுகிறது. இதனை கற்ற எத்தனை இளைஞர் யுவதிகள் மனதளவில் மாற்றமடைந்திருப்பார்கள் ? எனவே இவ்வாறான விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவை. வெறுமனே கத்தோலிக்க மக்களுக்காக மாத்திரம் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. முழு நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறே கோருகின்றோம்.

மத்ரசா பாடசாலைகள் தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டது. இவற்றில் கற்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும். விசேட நிபுணர்கள் கொண்ட குழுவினரால் இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதோடு, இதனை தேசிய வேலைத்திட்டமாக முன்னெடுக்க வேண்டும். இவற்றை முறையாக செயற்படுத்தினால் மாத்திரமே நாட்டு மக்களை அபாயத்திலிருந்து பாதுகாக்க முடியும். இதனை சாதாரண விடயமாக்க முயற்சிக்காமல் முறையான விசாரணைகளை முன்னெடுத்து நியாயத்தை வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment