இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2 இலட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக 50 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 50 இலட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 12 கோடியே 38 இலட்சத்து 52 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் வட மாநிலங்களில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறுவதற்கான வைத்தியசாலைகளில் இட வசதிகள் இன்றி தொற்றாளர்கள் அவதியுற்று வருகின்றனர்.
அங்கு கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படுகின்ற உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பது கவலைதரக்கூடிய அம்சமாக மாறி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று இரவு முதல் வரும் 26 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ஹொங்கொங் அரசு நிறுத்தி உள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் ஹொங்கொங்கில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment