அரசாங்கத்திற்குள் பல போராட்டங்கள், தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுவோம், 20 ஆவது திருத்தம் மக்களாணைக்கு முரணானது : அமைச்சர் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

அரசாங்கத்திற்குள் பல போராட்டங்கள், தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுவோம், 20 ஆவது திருத்தம் மக்களாணைக்கு முரணானது : அமைச்சர் உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்குள் பல போராட்டங்கள் காணப்படுகின்றன. அப்போராட்டங்கள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அல்ல பாதுகாப்பதற்கு என்பதை பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஒரு சில ஏற்பாடுகள் மக்களாணைக்கு முரணானது. அரசாங்கத்தின் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுவோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆளும் தரப்பிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதாகவும், அரசாங்கத்திற்குள் போராட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள போதிலும், அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவே, தவிர அரசாங்கத்தை வீழ்த்துவதற்கல்ல.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மக்களாணைக்கு முரணானது என்பதை ஆரம்பத்தில் இருந்து சுட்டிக்காட்டியுள்ளோம். மக்களாணைக்கு மதிப்பளிக்கும் தலைவர்களாயின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கான யோசனை கூட எழுந்திருக்காது.

அரசியல்வாதிகளின் அழுத்தங்களினால் அரச அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்படுவது கூட மக்களாணைக்கு முரணாகும். இவ்வாறான தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளோம். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு எமக்குண்டு. பொதுஜன பெரமுன தலைமையினை அரசாங்கத்தை தோற்றுவிக்க நாட்டு மக்களிடம் நாங்களே பல வாக்குறுதிகளை முன்வைத்தோம்.

மக்களாணைக்கு முரணாக அரசாங்கம் செயற்படும் போது அதனை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்குண்டு அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் எமக்கு கிடையாது. பாரிய போராட்டத்திற்கு மத்தியில் ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தை பாதுகாத்து சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுப்பது சிறந்ததாகும் என்றார்.

No comments:

Post a Comment