14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் சதொச விற்பனை நிலையம் மூடப்படும் - உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும்போது நிவாரண பொதியை கொண்டு செல்லுங்கள் : பந்துல குணவர்தன - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் சதொச விற்பனை நிலையம் மூடப்படும் - உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும்போது நிவாரண பொதியை கொண்டு செல்லுங்கள் : பந்துல குணவர்தன

(இராஜதுரைஹஷான்)

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாட்டு மக்களுக்கு ஆயிரம் ரூபாவில் தரமான பொருட்களை நிவாரன அடிப்படையில் வழங்கியுள்ளோம். புத்தாண்டில் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும்போது இந்த நிவாரண பொதிகளை கொண்டு செல்லுங்கள். 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மாத்திரம் சதொச விற்பனை நிலையம் மூடப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிவாரண பொதி தரமற்ற உணவுப் பொருட்களை உள்ளடக்கியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய நிவாரண பொதியில் இலங்கை தர நிர்ணய சபையின் முத்திரை பதித்த உணவு பொருட்கள் மாத்திரம் பொதி செய்யப்பட்டுள்ளன.

இந்த விலையினை காட்டிலும் குறைவான விலையில் தரமான பொருட்களை பிறிதொரு விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியாது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் மத்தியில் இவ்வாறான நிவாரணம் வழங்குவது சாதாரண விடயமல்ல.

ஆயிரம் ரூபா அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளடங்கிய பொதி விற்பளை செய்துள்ளமையால் சதொச விற்பனை நிறுவனம் வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு இலாபமடைந்துள்ளது.

பண்டிகை காலத்தில் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் போது இந்த நிவாரண பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நாடு தழுவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 14, 15 ஆகிய தினங்களில் மாத்திரம் மூடப்படும். 16 ஆம் திகதி நிவாரண பொதி விற்பனை செய்யப்படும். சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமைய சதொச விற்பனை நிலையங்கள் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படும்.

கடந்த காலத்தை காட்டிலும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 27 அத்தியாவசிய பொருட்களின் விலை நிலையான தன்மையில் பேணப்படுகிறது. சிறு ஏற்றுமதி பயிர்களின் விலைகள் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளுர் விவசாயிகள் நன்மை பெற்றுள்ளார்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad