ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், தான் நீதிமன்றம் சென்று போராடியதன் காரணமாகவே 1000 ரூபா சம்பள இலக்கை வென்றெடுக்க முடிந்தது - வடிவேல் சுரேஸ் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், தான் நீதிமன்றம் சென்று போராடியதன் காரணமாகவே 1000 ரூபா சம்பள இலக்கை வென்றெடுக்க முடிந்தது - வடிவேல் சுரேஸ்

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், தான் தனது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றத்திற்கு சென்று போராடியதன் காரணமாகவே 1000 ரூபாய் சம்பளம் என்ற இலக்கை வென்றெடுக்க முடிந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை அரசியல் கட்சி, தொழிற்சங்க பேதமின்றி பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள விவகாரம் தொடர்பில் நான்காவது தினமாகவும் இன்று நாம் நீதிமன்றம் சென்றிருந்தோம். எமது சட்டத்தரணிகளின் திறமையான வாதத்தின் மத்தியில் முதலாளிமார்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நீதிமன்றம் முற்றாக நிராகரித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்கப்பட்டு, 2217 கீழ் 37 என்ற இலக்கத்தை கொண்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவை, பெருந்தோட்ட கம்பனிகள் நிறைவேற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நீதி மன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய 900 ரூபாய் அடிப்படை சம்பளமும் 100 ரூபாய் வாழ்க்கை செலவுமாக , 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும். இதுவும் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 1000 ரூபாய் அப்படை சம்பளத்தை நிலுவை கொடுப்பனவுடன் வழங்க வேண்டும்.

இதேவேளை, எதிர்வரும் நீதிமன்ற விசாரணைகள் மே மாதம் 5 மற்றும் 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதன, அதற்கும் நாம் செல்ல தயாராக இருப்பதுடன், இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு, நலன்புரி மற்றும் வழமை தொடர்பில் நீதிமன்றம் கவனம் செலுத்தும் என்று நாம் நம்புகின்றோம்.

143 கீழ் 2021 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த இடைகால தடை உத்தரவு முற்றாக நிராகரித்தமை தொடர்பில் நீதி மன்றத்துக்கு நன்றி தெரிவிப்பதுடன், எமது தொப்புள் கொடி உறவுகள் சார்பில் எமது சட்டத்தரணிகளுடன் மன்றத்தில் முன்னிலையாகி உரிமைகளை வென்றெடுக்க நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம்.

இது எமக்கு கிடைக்கப் பெற்ற பாரிய வெற்றியாகும். இது வடிவேல் சுரேஸ் என்ற தனிநபரின் போராட்டத்தால் முன்னெடுக்கப்பட்டது. ஏனையவர்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் மேலும் பல வெற்றிகளை சுவிகரித்துக் கொண்டிருக்கலாம்.

எமக்கு கிடைக்கப் பெற்ற இந்த வெற்றியை தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் என்று பிளவுப்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவதுடன், எதிர்வரும் காலங்களில் தோட்ட தொழிலாளர்களை தோட்ட நிர்வாகங்கள் நசுக்குவதற்கு இடமளிக்க கூடாது.

கடந்த கால அரசாங்கங்கள் அவர்களது வசதிக்கேற்ப பல்வேறு அமைச்சுகளை நியமித்து, தோட்ட மக்களின் முன்னிலையில் நாடகங்களை அரங்கேற்றி வந்துள்ளனர்.

பல்வேறு வீட்டுத் திட்டட்டங்களை முன்வைத்தாலும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டம் மாத்திரமே அங்கு காணப்படுகின்றது. எமது அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். அதனூடாக அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள கூடாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் நாம் நான்கு தடவையாகவும் நீதிமன்றம் சென்றதின் பின்னரே 1000 ரூபாய் கிடைக்கப் போகின்றது.அரசாங்கம் எமது மக்களை கைவிட்டாலும் நான் எனது மக்களை கைவிடுவதற்கு ஆயத்தமில்லை.

இதேவேளை ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு ஒன்றை உருவாக்க நானே முன்னின்று செயற்பட்டிருந்தேன். இல்லை என்றால் எமது பெண் அதிபர்களை முலங்காலிடும் செய்றபாடுகளே கடந்த காலங்களில் இடம்பெற்று வந்தன. அதனை மாற்றி அமைக்கும் நோக்கத்திலேயே நாம் இந்த திட்டத்தை கொண்டுவந்தோம். அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டிருந்தோம். 

13 க்கும் அதிகமானது என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது 13 க்கும் குறைந்துள்ளது என்ற அடிப்படையிலேயே மாகாண சபை முறைமை காணப்படுகின்றது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது ஊவா மாகாணத்தை கைப்பற்றி தமிழ் கல்வி அமைச்சை ஸ்தாபிப்பதோடு மன்றுமன்றி எமது கலை கலாசார செயற்பாடுகளையும் மேற்கொள்வோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad