பாரிய கிரவல் அகழ்வு தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்! - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 23, 2021

பாரிய கிரவல் அகழ்வு தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

வவுனியா - ஓமந்தை - கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற கிரவல் அகழ்வு தொடர்பில் கிராம மக்கள் மற்றும் கிராம அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து அப்பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழாம் நேற்று (திங்கட்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

வவுனியா - ஓமந்தை - கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற கிரவல் அகழ்வு தொடர்பாக அபிவிருத்தி குழுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய கூட்டங்களில் பல தடவைகள் பொது அமைப்புகளால் குறித்த விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் குறித்த விடயத்தை ஆராயும் முகமாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த சூழல் பாதுகாப்பு தொடர்பாக எல்லா மாவட்டங்களிலும் நாளையதினம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற இருக்கின்றது. சிங்கராஜவனம் அழிக்கப்படுகின்றது என கூறி ஒரு சிறுமி தென்னிலங்கையிலே பாரிய போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருக்கின்றார்.

அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்ற பலர் இந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இங்கும் மிக மோசமாக சுற்றுச்சூழல் பாதிப்படைவதனை காணக்கூடியதாக இருக்கின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

காடழிப்பு மற்றும் மண் அழிப்பு என்பன கொடுக்கப்படுகின்ற அனுமதிக்கு மேலதிகமாக அழிக்கப்படுகின்றது. நாங்கள் இங்கு வருகின்ற போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் ஓடி விட்டார்கள். இவ்வாறு தப்பி ஓடியதில் இருந்தே தெரிகிறது. சட்டவிரோதமாக மண் அகழ்கிறார்கள் என்று. 

இந்நிலமை நாட்டில் இருக்கின்ற ஒரு மோசமான நிலையாக இருக்கின்றது. இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றார்.

குறித்த பகுதிகளில் தனியார் மற்றும் அரச காணிகளிலேயே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad