டுபாயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுக்கவுடையது - மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

டுபாயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுக்கவுடையது - மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது

துபாயிலிருந்து கடந்த 18 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சடலம், கெசல்வத்த தினுக்க என்றழைக்கப்படும் தினுக மதுஷானுடையதுதான் என மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெசல்வத்த தினுக்கவின் கைவிரல் அடையாளம், அவரின் தாயாரின் மரபணு பரிசோதனையினூடாக சடலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி இவர் நாட்டிலிருந்து சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

நாட்டிலிருந்து செல்வதற்கு முன்னர் வாழைத்தோட்டம் பொலிஸாரால் தினுக்க கைது செய்யப்பட்டுள்ளதுடன், அப்போது பெறப்பட்ட கைவிரல் அடையாளம் சடலத்தின் கைவிரல் அடையாளத்துடன் பொருந்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில், கெசல்வத்த தினுக்க உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி முற்பகல் 11.25 க்கு ஶ்ரீ லங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சடலமொன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ராஜபக்ஸகே கசுன் மதுரங்க என சடலத்தில் பெயரிடப்பட்டிருந்தது.

எனினும், பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்த, கெசல்வத்த தினுக்க என்றழைக்கப்படும் ராஜபக்ஸ ஆராச்சிகே தினுக மதுஷான் என்பவரின் சடலமே கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதனை உறுதி செய்துகொள்வதற்காக கெசல்வத்த தினுக்கவின் தாயுடைய மரபணு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன், அவரின் கைவிரல் அடையாள மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சடலம் கெசல்வத்த தினுக்க என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சடலம் நீர் கொழும்பு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பின்னர், தினுகவின் தாயாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும் அவரது மரணத்துக்கான காரணம் உறுதியாக தெரியவராத நிலையில், உடற் கூறுகள் மேலதிக ஆய்வுக்காக பெறப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment