மியன்மார் இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி மீது புதிய குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

மியன்மார் இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி மீது புதிய குற்றச்சாட்டு

மியன்மாரில் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பதவி கவிழ்க்கப்பட்ட ஆளும் கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி கையூட்டு பெற்றதாகப் புதிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சொத்து மேம்பாட்டாளரான பிரபல தொழிலதிபர் மோங் வேக், சூச்சியிடம் சட்டவிரோதமாக அரை மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

அந்தப் பணத்தைக் கறுப்பு உறைகளில் வைத்து, சூச்சியிடம் அவரின் வீட்டில் கொடுத்ததாக மோங் கூறினார். ஒரு முறை 100,000 டொலரையும், 2019ஆம் ஆண்டில் வேறோரு முறை 150,000 டொலரையும் கொடுத்ததாக அவர் கூறினார்.

இந்த புதிய கையூட்டுக் குற்றச்சாட்டைத் தவிர்த்து, சூச்சி மீது சட்டவிரோதமாகத் தொலைத் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்ததாகவும், வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாடெங்கும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

கடந்த புதனன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் மேலும் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் சுமார் 220 பேர் பலியாகியுள்ளனர்.

இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்படி கோரி, மியன்மார் மீது பிராந்திய அளவிலான நெருக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

No comments:

Post a Comment