மன்னாரில் வீடு தீக்கிரை : பொருட்கள் எரிந்து நாசம் - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

மன்னாரில் வீடு தீக்கிரை : பொருட்கள் எரிந்து நாசம்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இன்று திங்கட்கிழமை (22) மதியம் குறித்த பகுதியில் 2 மணி அளவில் குறித்த வீட்டில் திடீர் என தீ பரவல் ஏற்பட்டு எரிந்த நிலையில் அயல் வீட்டில் உள்ளவர்கள் அதன் உரிமையாளருக்கு தகவல் வழங்கிய நிலையில் உரிமையாளர் அவ்விடத்திற்கு வந்து தீயை அனைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

அயலவர்கள் மற்றும் கடற்படை, இராணுவம், மன்னார் நகர சபை ஆகியோரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் வீட்டிற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த வீட்டில் வாடகைக்கு வசிப்பவர்கள் அயல் கிராமத்திற்கு இறப்பு வீடு ஒன்றிற்கு சென்றுள்ள நிலையில் குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதனையடுத்து அவர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டு அவர்களும் அவ்விடத்திற்கு சென்று மீதமான பொருட்களை மீட்டுள்ளனர்.

வீட்டில் வசிப்போர் வாகனம் ஒன்று வைத்துள்ள நிலையில் அந்த வாகனத்திற்கான டயர் மற்றும் காற்று அடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட ஏனைய பொருட்களும் வீட்டின் ஓர் அறையில் இருந்த நிலையில் தீ பரவல் காரணமாக முன் பகுதி மற்றும் கூரை பகுதி பாரிய சேதங்கள் ஏற்பட்டு தீக்கிரையாகி உள்ளது.

குறித்த சம்பவம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்று அறிய முடியாத நிலையில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் நகரப் பகுதியில் தீயணைப்பு படை பிரிவு இல்லாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும் இதுவரை குறித்த படைப்பிரிவும், தீயணைப்பு வாகனமும் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad