ஒக்ஸ்பேர்ட் அஸ்டசெனிகா தடுப்பூசிகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமா என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க வேண்டும் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

ஒக்ஸ்பேர்ட் அஸ்டசெனிகா தடுப்பூசிகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமா என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க வேண்டும் - சஜித் பிரேமதாச

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் 220 இலட்சம் மக்களுக்கு கொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ள நிலையில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை விடுத்து தேசிய ஒளடத அதிகார சபை நிராகரித்துள்ள சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, நிதி அமைச்சின் விசேட அறிவிப்பொன்றை நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்த வேளையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதன்போது அவர் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்க நேர்ந்துள்ளதாக இராஜங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சபையில் கூறியுள்ளார். 

இந்த நாட்டில் 220 இலட்சம் மக்களுக்கும் தேவையான 440 இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? இப்போது வரையில் ஒரு தடுப்பூசி மட்டுமே பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது தடுப்பூசி மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுமா? அல்லது தேசிய ஒளடத அதிகார சபை அனுமதி மறுத்துள்ள சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாட்டுக்கு தேவையான அனைத்தையும் நாம் செய்வோம், மக்களுக்கு எது தேவையோ அதனையே நாம் செய்வோம். மக்களுக்கு எப்போதும் நன்மைகளை செய்யும் உணர்வுடன் நாம் செயற்படுகின்றோம்.

இன்றுவரை நூறு நாடுகளில் ஒரு தடுப்பூசியை கூட பெற்றுக் கொடுக்க முடியாத நிலை இருந்தும் நாம் மக்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்கின்றோம். இதனை எதிர்க்கட்சி உணர்ந்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர், ஒரு நபருக்கு இரண்டு தடுப்பூசிகள் வழங்க வேண்டும், ஆனால் அரசாங்கம் அதனை பெற்றுக் கொடுக்க முடியாத காரணத்தினால் அங்கீகாரம் இல்லாத தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. எனவே ஒக்ஸ்பேர்ட் அஸ்டசெனிகா தடுப்பூசிகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமா என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment