சர்வதேச விசாரணை குழுவும் அவசியம், எல்லாம் அரசியல் ரீதியிலேயே தீர்மானம் - சஜித் பிரேமதாச - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

சர்வதேச விசாரணை குழுவும் அவசியம், எல்லாம் அரசியல் ரீதியிலேயே தீர்மானம் - சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியையும் தாக்குதல்களை திட்டமிட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணைக் குழுவையும் இணைத்து கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்புவேளை பிரரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பகுதியளவிலான அறிக்கையாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை உள்ளது. ஒரு பகுதி வெளியிடப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பகுதி தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மறைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலின் அறிக்கை அந்த நாட்டு அரசாங்கத்தினால் மறைக்கப்படவில்லை. அந்த அறிக்கை புத்தகக் கடைகளிலும் உள்ளன. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்த முழு அமெரிக்காவும் ஒன்றாகியது.

ஆனால் இங்கே அரசியல் ரீதியிலேயே அதுபற்றி தீர்மானிக்கப்படுகின்றது. தங்களுடன் இருக்காவிட்டால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வோம் என்று அச்சுறுத்தும் நிலைமையே காணப்படுகின்றது. 

அமெரிக்காவின் செப்டம்பர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டு அவரை அழித்துள்ளனர். அதேபோன்று இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார்? சஹரானா அவர். இது தொடர்பாக நன்கு ஆராய வேண்டியது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad