நிபுணர்கள் குழு அங்கீகரிக்காத தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சி - எரான் விக்கிரமரத்ன - News View

Breaking

Post Top Ad

Saturday, March 27, 2021

நிபுணர்கள் குழு அங்கீகரிக்காத தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சி - எரான் விக்கிரமரத்ன

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக அவசர பயன்பாட்டுக்கு உகந்த தடுப்பூசிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பேராசிரியர் ஹசித டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் அனுமதி வழங்கப்படாத தடுப்பூசியை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்க அனுமதிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளில் பாரபட்சம் காட்டப்படுகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தடுப்பூசியையும் பொதுமக்களுக்கு வழங்க அனுமதிக்க முடியாது. தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்றை நியமித்து அதற்கமையவே செயற்பட வேண்டும்.

எனினும் கடந்த ஆண்டு டிசம்பரில் இதற்காக பேராசிரியர் ஹசித டி சில்வா தலைமையில் ஐவர் கொண்ட விஷேட நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த தடுப்பூசிகள் தொடர்பான அறிக்கையை கடந்த 17 ஆம் திகதி தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை அதிகார சபைக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் குறித்த தடுப்பூசி தொடர்பாக கிடைத்துள்ள தகவல்கள் போதாது எனவும், எனவே அதனை இலங்கையில் பயன்படுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்குழுவின் தலைவரான பேராசிரியர் ஹசித டி சில்வா தற்போது பதவி விலகியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் துரதிஷ்டவசமானதாகும். அரசியல் அழுத்தங்களின் காரணமாகவே இவ்வாறு இடம்பெறுகிறது.

அத்தோடு இக்குழுவினால் குறித்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு அதனை பொதுமக்களுக்கு வழங்க முடியும்? நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய அதேவேளை, அவை அனுமதிக்கப்பட்ட தடுப்பூசியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

தடுப்பூசி தொடர்பில் அரசியல்வாதிகளால் அல்லது சுகாதார அமைச்சினால் தீர்மானிக்க முடியாது. அதனை தடுப்பூசி தொடர்பான விசேட குழு மாத்திரமே தீர்மானிக்க முடியும். அதற்காகவே நாட்டில் தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்துகை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை மீறி செயற்பட இடமளிக்க முடியாது. எனவே எந்த தடுப்பூசி இலவசமாகக் கிடைத்தாலும் விசேட நிபுணர்களின் குழுவின் அனுமதியின்றி அவற்றை வழங்க முடியாது.

No comments:

Post a Comment

Post Bottom Ad