நாடு திரும்பும் பணியாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் - 'நாடும் சித்தியடையவில்லை, சேரும் சித்தியடையவில்லை, வாக்களித்தவர்களும் சித்தியடையவில்லை' - News View

About Us

About Us

Breaking

Friday, March 19, 2021

நாடு திரும்பும் பணியாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் - 'நாடும் சித்தியடையவில்லை, சேரும் சித்தியடையவில்லை, வாக்களித்தவர்களும் சித்தியடையவில்லை'

(செ.தேன்மொழி)

இராஜதந்திர வீசாவில் வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்களது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்காக வழங்கப்பட்ட அனுமதியை, வெளிநாடுகளில் பணிபுரிந்து நாட்டுக்கு திரும்பும் பணியாளர்களுக்கும் வழங்குமாறு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியினரினால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, ஹரின் பெர்னாண்டோ, ஹெக்டர் அப்புஹாமி, காவிந்த ஜயவர்தன, ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், நளின் பண்டார, மனுஷ நாணயக்கார, ஜே.சீ. அலவத்துவல, சுஜீத் பெரேரா மற்றும் திலீப் வெத ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களுடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ள பணியாளர்கள் சிலரும், தற்போது வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ள பணியாளர்களின் உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சுமார் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், 'ஒரு நாடு - ஒரே நீதி' 'வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு இராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி, வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பும் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்' 'நாடும் சித்தியடையவில்லை, சேரும் சித்தியடையவில்லை, வாக்களித்தவர்களும் சித்தியடையவில்லை', 'ஹோட்டலில் தனிமைப்படுத்தும் அரசாங்கத்தின் சதியிலிருந்து வெளிநாட்டு பணியாளர்களை பாதுகாப்போம்' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்பாட்டதாரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டதார்களின் மத்தியிலிருந்த பெண்ணொருவர் தாம் வெளிநாட்டில் பணிப் பெண்ணாக செயற்பட்டு வந்ததாகவும், நாடு திரும்புவதற்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவித்ததார். 

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் பணிப் பெண்கள் உள்ளிட்ட ஏனைய தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், அவர்கள் தொடர்பில் இலங்கைக்காக அந்நாட்டில் இயங்கி வரும் தூதரங்கங்கள் கவனம் செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டதுடன், பணிப் பெண்கள் தூதரங்கங்களுக்கு முன்னால் வீதிகளில் இருப்பதாவும், அவர்களுக்கு போதிய உணவு, நீர் என்பன கிடைப்பதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மற்றுமொரு பெண் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக தான் வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததாக தெரிவித்ததுடன், தற்போது வெளிநாட்டிலிருக்கும் பணிப் பெண்களின் நிலைமையை பார்த்து கவலையடைவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோளும் விடுத்திருந்தார். 

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்ததுடன், ஆர்ப்பாட்டதாரர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்ததன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.

படப்பிடிப்பு: தினேத் சமல்க

No comments:

Post a Comment