ஜம்இய்யத்துல் உலமா முழுமையாக வஹாபிச கொள்கைக்குள் மூழ்கியுள்ளது - திட்டமிட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெறுகிறது : அதுரலியே ரத்தன தேரர் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

ஜம்இய்யத்துல் உலமா முழுமையாக வஹாபிச கொள்கைக்குள் மூழ்கியுள்ளது - திட்டமிட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெறுகிறது : அதுரலியே ரத்தன தேரர்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையின் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மத அமைப்பான ஜம்இய்யத்துல் உலமா சபை வஹாபிசத்தை அங்கீகரித்துள்ளதாகவும், இஸ்லாமிய வஹாபிசத்தை அடியோடு ஒழிக்க கட்சி பேதமின்று ஒன்றிணைய வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் ஆவேசமாக தெரிவித்தார்.

அதேபோல் இலங்கையில் திட்டமிட்ட முஸ்லிம் மயமாக்கல் இடம்பெற்றுக் கொண்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே இதனை கூறினார்.

சர்வதேச ஐ.எஸ் அமைப்பினால் இலங்கையை முழுமையான இஸ்லாமிய இராச்சியமாக மாற்றுவதாக அவர்களின் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. எனவே வஹாப் கொள்கையின் கீழ் பல்வேறு அமைப்புகள், நபர்கள் செயற்பட ஆரம்பித்துள்ளனர். 

இலங்கையின் சகல முஸ்லிம்களையும் பிரதிநித்துவப்படுத்தும் மத அமைப்பாக ஜம்இய்யத்துல் உலமா சபை செயற்படுகின்றது. இந்த சபை வஹாப் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல வஹாப் கொள்கை சகல இஸ்லாமிய புத்தகங்களில், பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுவதாக ஜனாதிபதி ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல மதரசாக்களையும் அடிப்படைவாதத்தை கற்கும் ஒன்றாகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே சகல மாணவர்களும் பொதுவான கல்வி திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதனையே நாம் விவாதிக்க வேண்டும். 

இந்த நாட்டில் மாற்றங்களை செய்தாக வேண்டும். சிங்கள, இந்து மக்களுக்கு காதி நீதிமன்றத்தினால் இழைக்கப்படும் அநியாயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதை விடுத்து வெறுமனே சஹரானுடன் தொடர்புபட்ட நபர்களை தூக்கில் போடுவதை பற்றி பேசி அர்த்தமில்லை. அதுவும் முக்கியமானதே, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கூறப்படுவது நியாயமானதே, ஆனால் அதனையும் தாண்டி சமுகத்தில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல பொதுபலசேனாவை தடை செய்வதில் எந்த நியாயமும் இல்லை. பொதுபலசேனா எந்தவொரு கலவரத்திலும், அடிப்படைவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. ஆயுதம் ஏந்தவில்லை, தாக்குதல் நடத்தவில்லை. எனவே ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்த நாட்டின் முஸ்லிம் கல்விமான்கள் என கூறப்படும் அமீன் உள்ளிட்ட பலர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு முழுமையாக வஹாப் கொள்கைக்குள் மூழ்கியுள்ளது என அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே ஜம்இய்யத்துல் உலமா அமைப்பை அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது.

இந்த நாட்டில் வஹாப் வாதத்தை முழுமையாக அழித்தாக வேண்டும். சர்வதேச இஸ்லாமிய சட்டங்களை நிறுத்தவும், காதி நீதிமன்றத்தை முழுமையாக நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு.

இலங்கையில் முஸ்லிம் மயமாக்கல் இடம்பெற்றுகின்றது. இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் இடங்களை ஆக்கிரமித்து, பல்கலைக்கலகங்களை ஆரம்பிப்பதாக கூறி வெளிநாட்டு பணத்தை பெற்றுள்ளமை என சகலதும் இந்த அறிக்கையில் உள்ளது. 

எனவே ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி என பிரிந்து நிற்காது அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தை முழுமையாக துடைத்தெறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் ஆவேசமாக பேசினார்.

No comments:

Post a Comment