மன்னார் மாவட்டத்தை கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மாற்றியமைப்போம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 30, 2021

மன்னார் மாவட்டத்தை கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மாற்றியமைப்போம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில் இம்மாவட்டத்தை நாட்டின் கடற்றொழில் கேந்திர வலயமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மன்னார், ஓலைத்தொடுவாய் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பேசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய துறைமுகத்தினை உருவாக்கி அதனூடாக இம்மாவட்டத்தின் கடற்றொழில்த்துறையை மேம்படுத்தவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள குறித்த துறைமுகம், சிலரின் புரிதலற்ற எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

ஆனாலும் இம்மாவட்டத்தின் கடற்றொழிலாளர்களது நலன்கருதி தலைமன்னாரில் புதியதொரு ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த துறைமுகத்தை ஆழ்கடல் தொழில்துறையை மேற்கொள்பவர்கள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கான விசேட பயிற்சிகளையும் குறிப்பாக அரேபிய கடல்களுக்கு சென்று தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பயிற்சிகளையும் ஆழ்கடல் பலநாள் கலன்களுக்கான மானிய அடிப்படையிலான உதவிகளை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேபோன்று இப்பிரதேசத்தில் மேலும் பல அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நாரா மற்றும் நெக்டா நிறுவனங்கள் இணைந்து பொருத்தமான இடங்களை தெரிவுசெய்து 500 கடலட்டை பண்ணைகள் மற்றும் நன் நீர் வேளாண்மையை உருவாக்குவதற்கான ஆய்வுப் பணிகளையும் செயற்றிட்டங்களையும் மேற்கொள்ளவுள்ளன.

அதேபோன்று விடத்தில்தீவில் 500 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்கென பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கு பொருத்தமான நீர் வேளாண்மை தொழிலை விருத்தி செய்து பல பண்ணையாளர்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

இதனிடையே மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகளான உள்ளூர் மற்றும் எல்லைதாண்டிய, சட்டவிரோத குறிப்பாக இந்திய ரோலர் படகுகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், தலைமன்னாரில் துறைமுகம் அமைக்கப் பொருத்தமான இடங்களை நேரடியாக அதிகாரிகள் சகிதம் சென்று ஆய்வு செய்ததுடன், பேசாலை மீன்ரின் தொழிற்சாலை, ஐஸ்கட்டி தொழிற்சாலை போன்றவற்றையும் சென்று பார்வையிட்டார்.

நேற்று (30) இடம்பெற்ற கடலட்டை இனப்பெருக்க நிலையத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேயசேகர ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்நாயக்கா, கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா, கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad