பாராளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் தியவன்னா ஓயாவில் சுற்றாடல் மாசுபடுத்தப்படுவதென்றால் சிங்கராஜ வனத்தின் நிலைமை என்ன? - கேள்வி எழுப்பினார் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

பாராளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் தியவன்னா ஓயாவில் சுற்றாடல் மாசுபடுத்தப்படுவதென்றால் சிங்கராஜ வனத்தின் நிலைமை என்ன? - கேள்வி எழுப்பினார் சஜித் பிரேமதாச

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் தியவன்னா ஓயாவில் சுற்றாடல் மாசுபடுத்தப்படுவதென்றால் சிங்கராஜ வனத்தின் நிலைமை தொடர்பில் என்ன பேசுவது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்துக்கு உள் நுழையும்போது தியவன்னா ஓயாவில் ஒரு பகுதி கடந்த 2 வாரங்களாக நீரின் நிறம் மஞ்சள், பச்சை நிறமாக மாறி இருக்கின்றது. இது சுற்றாடலை மாசடையச் செய்திருக்கும் செயலா என்பது தொடர்பாக தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், பாராளுமன்றத்தின் முன்னால் இருக்கும் நீர் தடாகம் சுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் நீரை தியவன்னா ஓயாவுக்கு விட்டிருக்கின்றது. அதனால்தான் நீரில் நிறம் மாற்றமடைந்திருக்கின்றது. அந்த பகுதியை தற்போது சுத்தப்படுத்த வேண்டி இருக்கின்றது என்றார்.

இதன்போது மீண்டு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்றத்துக்கு நுழையும் இடத்திலே சுற்றாடல் மாசடைவதாக இருந்தால், சிங்கராஜ வனம், ஹோட்டன் தென்ன தொடர்பில் என்ன பேசுவது? 225 மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வரும் தியவன்னாவில் சுற்றாடல் மாசடைவு இடம்பெறுவதென்றால், இந்த நாட்டின் நிலைமை என்ன?

இதற்கு சபாநாயகர் தெரிவிக்கையில், கவனமில்லாமல் செய்ததனாலே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. தற்போது செய்வதற்கு வழியில்லை. அதனால் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, செய்ய வழியில்லை என்று இதனை சாதாரணமாக தெரிவிக்க வேண்டாம். நாளைக்கு சிங்கராஜ வனத்தை அழித்துவிட்டு, தற்போது செய்ய வழியில்லை என தெரிவித்தால் என்ன செய்வது? 

அதனால் தியவன்னா ஓயாவில் நீர் மாசடைந்திருப்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment