மாளிகாவத்தையில் துப்பாக்கி, போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

மாளிகாவத்தையில் துப்பாக்கி, போதைப் பொருட்களுடன் சந்தேகநபர் கைது

(எம்.மனோசித்ரா)

மாளிகாவத்தை பிரதேசத்தில் துப்பாக்கி, ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸாரால் நேற்று செவ்வாய்கிழமை 34 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 38 மில்லி மீற்றர் ரக துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தக் கூடிய துப்பாக்கி ரவைகள் 4, ஹெரோயின் 2 கிராம், ஐஸ் போதைப் பொருள் 10 கிராம், கஞ்சா 10 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என்று தெரியவந்துள்ளது. இவர் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸாரினால் போதைப் பொருள் தொடர்பிலான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். போதைப் பொருளற்ற இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கமுடியும்.

1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குவதன் ஊடாக பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முடியும்.

இதேபோன்று மரங்களை வெட்டுதல், சுற்றாடலை மாசுபடுத்துதல் தொடர்பிலும் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவை தொடர்பிலும் பொது மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad