ஜெனிவா தீர்மானத்தால் உருவாக்கப்படுகிறது உலகளாவிய சட்டவலை - சுட்டிக்காட்டுகிறார் கலாநிதி தயான் ஜயதிலக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, March 28, 2021

ஜெனிவா தீர்மானத்தால் உருவாக்கப்படுகிறது உலகளாவிய சட்டவலை - சுட்டிக்காட்டுகிறார் கலாநிதி தயான் ஜயதிலக்க

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் பிரத்தானிய தலைமையிலான ஆறு நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் உலகளாவிய ரீதியிலான சட்டவலையொன்று உருவாக்கப்படவுள்ளது என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் சாட்சியங்களை திரட்டுவதற்கும் பாதுகாப்பதற்குமான 12 பேர் கொண்ட குழுவானது ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுள் ஒரு நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான குணாம்சங்களுடனான பத்திரத்தினை வகிக்கவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையானது, இலங்கையில் மனித உரிமைகள் மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கு இலக்கான தனிநபர்களை இலக்கு வைத்து வெளிநாடுகளில் வழக்கு தொடுப்பதற்கு வழிசமைப்பதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் கடந்த 23ஆம் திகதி நிறைவுக்கு வந்திருந்தது. இதன்போது இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும், இலங்கை அரசாங்கம் அத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டது.

இவ்வாறான நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அடுத்த கட்டச் செயற்பாடுகள் எவ்வாறிருக்கப் போகின்றதென்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து வேறுப்பட்டதாக உள்ளது.

தீர்மானத்தின் தலைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் என்றவாறு அமைந்திருக்கின்றது. 

இதில் ஆறாவது செயற்பாட்டுப் பந்தியில், பொறுப்புக் கூறலை முன்னேற்றும் நோக்கத்துடன் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அத்து மீறல்கள் அதனுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பாக சான்றுகளை சேகரித்தல், பகுப்பாய்வு செய்து பாதுகாத்தல், செய்து பாதுகாப்பதற்கும், பாரிய மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் என்பவற்றின் பொறுப்புக் கூறலுக்கான எதிர்காலத் திட்டங்களுக்கான சாத்தியமான மூலோபாயங்களைத் தயாரிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பொறிமுறையானது 12 பேர் கொண்ட உலகின் தலைசிறந்த நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

சட்டமா அதிபரின் பாத்திரம்
இலங்கை தொடர்பான கண்காணிப்பு மீளாய்வுக்காலம் ஆறு மாதங்களாக சுருக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுள் இந்தப் பொறிமுறையின் செயற்பாடானது ஏறக்குறைய நாடொன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் குணாம்சங்களைக் கொண்ட பாத்திரத்திரமாகவே இருக்கப்போகின்றது.

அதாவது வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் உள்ள விடயங்களை சீர்தூக்கிப் பார்த்து மேலதிக சாட்சியங்கள், விசாரணைகள் ஆகியவற்றை அக்குழு மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன், ஐ.நா உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு இதுவரையில் உள்ளீர்க்கப்படாத குற்றச்சாட்டுக்கள் உடைய சம்பவங்கள் பற்றியும் இந்தக் குழுவானது சாட்சியங்களை திரட்டுவதற்கு முயற்சிக்கும். மேலதிக ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நீதிமன்ற வழக்குகளுக்கு உதவல் ஐ.நா. தீர்மனத்திற்கு அமைவாக, சாட்சியங்களை திரட்டும் இந்தக்குழுவானது வெளிநாடுகளில் குற்றச்சாட்டுக்களை உடையவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பின், அந்த வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக மேம்பட்ட ரீதியிலான சாட்சியங்களை அளிப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது.

குறிப்பாக தமது சாட்சியங்கள், ஆய்வறிக்கைகளை கையளிக்கும். இவ்விதமான செயற்பாடானது குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்கள் வெவ்வேறு நாடுகளில் சிக்குவதற்கான சந்தர்ப்பதினையே ஏற்படுத்துகின்றது.

உதாரணமாக கொள்வதாயின் ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை விவகாரத்தில் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கான சாட்சியங்கள் மற்றும் மேம்பட்ட ஆதாரங்களை வழங்குவதோடு நீதிக்காக தொடர்ந்து பணியாற்றவும் உள்ளது.

ஆகவே, நிபுணர்கள் குழுவைக் கொண்ட பொறிமுறையானது, சட்ட வலுவானதாக காணப்படுவதோடு அடுத்து வரும் காலத்தில், இலங்கை தொடர்பில் உலகளாவி ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘சட்டவலையாகவே’ பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இலங்கையினுள் பிரவேசிக்க வேண்டிய அவசியமில்லை
இந்த சாட்சியங்களை திரட்டும் நிபுணர்கள் வடக்கு கிழக்கிற்கோ அல்லது தென்னிலங்கைப் பகுதிகளுக்கோ நேரடியாக வந்து சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டியதில்லை. நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக காணொளி காட்சிகள் உள்ளிட்ட இதர வழிகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வெளியில் இருந்தே முன்னெடுக்கவுள்ளனர்.

மேலும் ஐ.நா. தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் முழுமையான நிராகரித்துள்ள நிலையில் சாட்சியங்களை திரட்டும் நிபுணர்கள் உள்நாட்டிற்குள் வருகை தருவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்பது திடமாக வெளிப்படுத்தப்பட்டு விட்டது. 

எனவே சாட்சியங்களை திரட்டும் குழுவும் இலங்கை அரசாங்கம் நிச்சயமாக ஒத்துழைப்புக்களை வழங்காது என்று கூறுமளவிற்கு நிலைமைகள் உள்ளன.

ஆகவே ஆட்சியாளர்களிடத்தில் தம்மை உள்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு இடமளிப்பார்கள் என்றும் அந்த நிபுணர்கள் குழு நம்பவில்லை. ஆகவே அவற்றின் செயற்பாடுகள் இலங்கைக்கு வெளியில்தான் அதிகளவில் ஈடுபடவுள்ளது.

பொதுச்சபை அனுமதி நிதிப் பயன்பாடும்
ஐ.நா. தீர்மானத்திற்கு அமைவாக சாட்சியங்களை திரட்டுதல் உள்ளிட்ட விடயங்களுக்காக 2.8 மில்லியன் தொடர்கள் செலவழிக்கப்படவுள்ளது. இந்த நிதியானது பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது. அதன், பின்னரே மேற்படி குழுவானது தனது செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளது.

உள்ளக பரிந்துரைகள்
போர் நிறைவடைந்ததன் பின்னர் அதில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் ஐந்து மாணவர்கள் உட்பட 11 பேரின் கடத்தல் தொண்டு நிறுவன தொழிலாளர்கள் படுகொலை இறுதிப் போரில் பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றவர்கள் இன்னமும் காணமலாக்கப்பட்டவர்களாக இருக்கும் நிலைமைகள் இவ்வாறு பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதேபோன்றுதான் மக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கையிலும் இவ்விதமான விடயங்களை கொண்டிருக்கின்றன.

ஆகவே அந்தப்பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததன் காரணத்தாலேயே தற்போதைய தீர்மானம் வலுவாக மாறியுள்ளது. இந்நிலையில் சாட்சியங்களை திரட்டும் குழு இந்த விடயங்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகளையும் செய்யும் என்று எதிர்பார்க்க முடியும். அவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அடுத்த அமர்வுகளில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் மீளாய்வு சமர்ப்பணங்களும் வலுவடையலாம். மேலும் ஆட்சியளர்களுக்கே மேலதிக நெருக்கடிகள் ஏற்படலாம்.

13ஆவது திருத்தம்
மேலும் இந்த தீர்மானத்தில் 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. சமகாலத்தில் சாத்தியப்படக் கூடிய விடயமொன்றாக இருப்பது 13ஆவது திருத்தச் சட்டமாகும். ஆகவே முதற்கட்டமாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்கி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றி தமிழ் அரசியல் கட்சிகள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment