அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 17, 2021

அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள்

ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (17) திடீரென முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக உறுதியளித்திருந்த புகையிரத சங்கங்கள், மீண்டும் நள்ளிரவு முதல், ஒரு நாள் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் எஞ்சின் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே உத்தியோகத்தர்களுக்கு எதிரான நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் பல தடவைகள் கலந்துரையாடியிருந்த போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளாந்தம் காலை நேரத்தில் சேவையில் ஈடுபடும் அலுவலக ரயில்கள் இன்று (18) சேவையில் ஈடுபட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கிடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தமது அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad