இன அழிப்பு விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் - நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஏன் பயப்படுகிண்றீர்கள்? : ஸ்ரீதரன் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Friday, March 26, 2021

இன அழிப்பு விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் - நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஏன் பயப்படுகிண்றீர்கள்? : ஸ்ரீதரன் எம்.பி.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

உலகம் வெட்கித்தலைகுனியக்கூடிய அளவுக்கு இலங்கையில் ஒரு பாரிய இன அழிப்பு நடைபெற்றது, இந்த உண்மைகளை தேசிய ரீதியில் கண்டறிய முடியாது எனவே இவ்விடயத்தில் சர்வதேசம் தீவிரமாக ஈடுபட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை விடயங்களை கொண்டு செல்லப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலைமை வகித்திருந்தாலும் இந்தியா இம்முறை கனதியான செய்தியை இலங்கைக்கு சொல்லியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலைகளுக்கான, அவர்கள் மீது புரியப்பட்ட போர் குற்றங்களுக்கு எதிராக, அவர்களுக்கு நீதிக்கு புறம்பாக நடைபெற்ற கொலைகளுக்கு எதிராக, சொத்தழிவுகளுக்கு எதிராக ஒரு நீதி வேண்டும் என்ற அடிப்படையில்தான் கடந்த 12 ஆண்டுகளாக ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றன. 

இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு இலங்கையில் கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுடைய காலத்தில் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக சில தீர்வுகளைத் தருவதாக ஒரு குழு நியமிக்கப்பட்டது. பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த இரு ஆணைக்குழுக்களுமே அரசினால் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு செயலிழந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டன.

நல்லிணக்க ஆணைக்குழுவில் சொல்லப்பட்ட எந்த விடயங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவுமில்லை. பரணகம ஆணைக்குழுவும் தன்னுடைய அறிக்கையின் ஊடாக நாட்டில் எதனையாவது நடைமுறைப்படுத்தியதாக வரலாறு இல்லை. அதனால்தான் உள்நாட்டிலே மேற்கொள்ளப்படாத இந்த விடயங்களை வெளிநாடுகள் தங்கள் கைகளில் எடுக்க வேண்டிய விடயம் மேலோங்கியுள்ளது. 

குறிப்பாக மியன்மாரில், சிரியாவில் மக்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள், இங்கேயும் கூட 2008, 2009 ஆம் ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் இருந்த பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துடன் தொடர்புடைய உதவி நிறுவனங்களை வடக்கு, கிழக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின்னர், அங்குள்ள மக்கள் அந்த அமைப்புக்களை வெளியேற வேண்டாமென கதறியழுத போதும் எங்களை காப்பாற்றுங்கள் என மன்றாடியபோதும் அந்த நிறுவனங்களை அகற்றிவிட்டு மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளும் கொத்தணிக் குண்டுகளும் வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கில் கொல்லப்பட்டார்கள்.

குறிப்பாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் தொகையும் காணாமல் போனவர்களின் தொகையும் 1,46,000 க்கும் மேல் என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்பாக மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் தன்னுடைய சாட்சியமாக முன்வைத்திருந்தார்.

இவ்வாறெல்லாம் தொடர்ச்சியாக வந்த இந்த பிரேரணைகள் பிரகாரம்தான் கடந்த 23 ஆம் திகதி கூட இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் வாக்களித்து அந்த பிரேரணையை நிறைவேற்றியுள்ளன. 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா நடு நிலைமை வகித்திருந்தாலும் இந்தியா இம்முறை கனதியான செய்தியை சொல்லியுள்ளது.

இலங்கையில் ஒரு இனப் பிரச்சினை இருக்கின்றது. இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இலங்கையினுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான தமிழ் மக்களுடைய சுயாதிபத்தியத்தையும் சுயாட்சியையும் வலியுறுத்தக் கூடிய வகையில் ஒரு தீர்வை முன்வையுங்கள் என இந்தியாவின் பிரதிநிதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பேசியுள்ளார். இது காலத்தினுடைய கனதியான செய்தியாக நாம் பார்க்கின்றோம்.

அன்னை இந்திரா இந்தியப் பிரதமராக இருந்த காலப்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைககளை மனிதக் குற்றங்களை வெளியுலகுக்கு கொண்டு வந்ததும் இலங்கையில் ஒரு இனப் பிரச்சினை இருக்கின்றது என்பதனை வெளியுலகுக்கு கொண்டு வந்ததும் அவருடைய காலம். இப்போது மீண்டும் இந்தியப் பிரதமர் மோடி தலைமையில் இந்திய அரசு இதனை மீண்டும் சர்வதேச தளத்தில் வெளியில் கொண்டுவந்துள்ளது மிக முக்கியமானது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கின்றார். நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் எதற்காக நீங்கள் இதற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்? பிரேரணை தோற்று விட்டது என்கின்றீர்கள். முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை முன் வைக்கின்கிறீர்கள்.

ஆதரவாக 22, எதிராக 11, நடுநிலையில் 14 ஆகவே 25 நாடுகள் இந்த பிரேரணையை எதிர்த்துள்ளன என இலங்கை ஒரு புள்ளிவிபரம் சொல்கின்றது. நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஏன் பயப்படுகிண்றீர்கள்? 

இலங்கையில் இராணுவமும் அரசும் தமிழ் மக்கள் மீது கொலைகளை செய்யவில்லை, குற்றங்களைப் புரியவில்லை, தமிழ் மக்கள் மீது அநீதிகளை செய்யவில்லை என்றால் ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்? விசாரணைக்கு முகம் கொடுக்கலாம்தானே? 

உங்கள் மடியில் கனதி இருப்பதனால்தான் இதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கின்றீர்கள். நீங்கள் யுத்தக் குற்றம் செய்யவில்லை என்றால் ஒரு பகிரங்க விசாரணைக்கு தயாராகுங்கள்.

உலகம் வெட்கித்தலைகுனியக் கூடிய அளவுக்கு இலங்கையில் ஒரு பாரிய இன அழிப்பு நடைபெற்றது. எனவே இவ்விடயத்தில் சர்வதேசம் தீவிரமாக ஈடுபட வேண்டும் இவ்விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அங்கு இது விசாரிக்கப்பட வேண்டும். தமிழர்களின் அபிலாஷை அதுதான். ஏனெனில் இந்த நாட்டில் உங்களிடம் இருந்து நீதி கிடைக்கவில்லை. நீங்கள் நீதியாக நடத்தவும் தயார் இல்லை.

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அவர் உரையாற்றிய பல இடங்களில் இந்த நாட்டில் ஒரு தமிழினம் இருப்பதாக, அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக கூறியதுமில்லை. ஏற்றுக் கொண்டதுமில்லை. அவரின் கிராமமட்ட சந்திப்புக்கள் கூட இதுவரை வடக்கிலோ கிழக்கிலோ நடந்ததுமில்லை.

இந்த நாடு ஒரு இனவாத சக்திக்குள் மூழ்கிப்போயுள்ளது. அமைச்சர்கள் இனவாதத்தை கக்குகின்றார்கள். இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டை கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள். எனவே சர்வதேச விசாரணை வேண்டும் என்பதும் எமக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad