(எம்.ஆர்.எம்.வசீம்)
சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் பிரதேச சபை உறுப்பினர்கள் 98 பேரை கட்சியின் மகளிர் தின நிகழ்வுக்கு அழைப்பு விடுக்காதமை அவர்களின் உரிமையை மீறும் செயலாகும் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சுதந்திர கட்சி பிரதேச சபை பெண் பிரதிநிதிகள் 98 பேருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை இடம்பெற்று வருகின்றது. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை இடம்பெற்றாலும் இதுவரை அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவர்களின் மக்கள் பிரதிநிதி பதவி நீக்கப்படவில்லை. அதனால் இந்த நிகழ்வுக்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் இந்த 98 உறுப்பினர்களுடன் மாகாண சபை உறுப்பினர்கள் 250 க்கும் அதிகமானவர்களக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை விசாரணை இடம்பெற இருக்கின்றது. இவர்களை கட்சியில் இருந்து முற்றாக நீக்குவதா அல்லது கடுமையான எச்சரிக்கை செய்து மீண்டு கட்சியில் இணைத்துக் கொள்வதா என கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் கட்சி அதிகாரி சபையில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
சிறிலங்கா சுதந்திர கட்சி பிரதேச சபை பெண் உறுப்பினர்கள் 248 பேர் இருக்கின்றனர். அவர்களில் 150 பேருக்கே நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. பெண்களின் உரிமை தொடர்பாக கதைக்கும் பெண்களின் தினத்தில் இந்த பெண் உறுப்பினர்களின் உரிமையை இல்லாமலாக்கி இருப்பதை கவலையுடனேனும் தெரிவிக்கவேண்டி இருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment