300 கிலோ ஹெரோயின், ஐந்து AK47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்களுடன் படகு பறிமுதல் - இலங்கையர்கள் ஆறு பேர் இந்திய படையினரால் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

300 கிலோ ஹெரோயின், ஐந்து AK47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்களுடன் படகு பறிமுதல் - இலங்கையர்கள் ஆறு பேர் இந்திய படையினரால் கைது

கேரளாவின் விழிஞ்சம் கடற் பகுதியில் இலங்கை மீன்பிடி படகொன்றில் இருந்த 300 கிலோ ஹெரோயின், AK47 துப்பாக்கிகள் 5, 1,000 தோட்டாக்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கரையோர பாதுகாப்பு படை மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ஆகியன இணைந்து மேற்கொண்ட குறித்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

கரையோர பாதுகாப்பு படை மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்குமைய, கேரளாவின், விழிஞ்சம் கடற்பகுதியில், கடந்த வியாழக்கிழமை (25) இரவு 'ரவிஹன்சி' எனும் பெயருடைய குறித்த மீன்பிடி படகை சோதனையிட்டபோது இக்கைது இடம்பெற்றுள்ளதாக, நேற்று (30) அந்நாட்டு போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் நேற்றையதினம் (30) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்போது 301 பொதிகளில் பொதி செய்யப்பட்டு படகின் உட்புறமுள்ள நீர்த் தாங்கியினுள் வைக்கப்பட்டிருந்த 300.323 கி.கி. ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதோடு, இவ்வனைத்து பொதிகளும், பறக்கும் குதிரை கொண்ட இலச்சினையுடன் பொதி செய்யப்பட்டிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தவிர, AK-47 வகை துப்பாக்கிகள் ஐந்து, 9 மி.மீ. வகை தோட்டாக்கள் 1,000 ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்படாத படகொன்று குறித்த ஹெரோயின் மற்றும் ஆயுதங்களை, ஈரானின் சபாஹர் துறைமுகத்திலிருந்து வந்து, குறித்த இலங்கை படகிடம் ஒப்படைத்துள்ளதாக, முதற் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இலங்கைப் படகு இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது L.Y. நந்தன, H.K.G.B. தேசப்பிரிய, A.H.S. குணசேகர, S.A. செனரத், T. ரணசிங்க, D. நிஸ்ஸங்க ஆகிய 6 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப் பொருள் கடத்தலுக்கும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பிற்கு தொடர்பு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரபுக் கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயின் கைப்பற்றல்களுடன் குறித்த வலையமைப்பிற்கு தொடர்புள்ளதாக நம்பப்படுவதாக, இந்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad