சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றதா? - பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 21, 2021

சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றதா? - பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

மஸ்கெலியாவில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என பிரதான தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அவ்வாறு பெற்றுக் கொடுக்கப்படும் என அரசாங்கமும் உறுதியளித்தது. 

இறுதியில் அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபாவை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இன்னும் கிடைக்கவில்லை.

அதேபோல சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட்டால், கூட்டு ஒப்பந்தம் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப் பெறும் சலுகைகள் இல்லாமல் போகும் நிலையும் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, கூட்டு ஒப்பந்தம், சம்பள நிர்ணய சபையா என்பதில் தற்போது தொழிலாளர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்குவதற்கான திட்டம் உள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பல தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு பெருந்தோட்டங்கள் வழங்கப்படலாம் எனவும், இதற்கு களம் அமைத்துக் கொடுப்பதற்காகவே சம்பள விடயத்தில் திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகளை கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் தனித்தனியே சந்தித்து வருகின்றார். அதானி நிறுவனத்துக்கு ஆதரவு வழங்குமாறு இதன்போது கோரப்பட்டிருக்கலாம். ஏனெனில் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்களை எந்தவொரு அரசியல்வாதியும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

மறுபுறத்தில் சீன நிறுவனங்களும் இலங்கையிலுள்ள வளங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. தற்போதுள்ள கம்பனிகளை விரட்டியடித்து, வெளிநாட்டு கம்பனிகளுக்கு பெருந்தோட்டங்களை வழங்குவதற்காக வியூகத்தை அமைக்கவா சம்பளம் இழுத்தடிக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது." என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment